UPDATED : ஜன 18, 2024 05:43 AM
ADDED : ஜன 18, 2024 02:49 AM

திருப்பூர்:போதிய மழைப்பொழிவு இல்லாததால், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. பத்து மாவட்டங்களில் மட்டும் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலம் பிரதானமாக உள்ளது. தமிழக நீர்வள ஆதாரத்துறை சென்னை நீங்கலாக 37 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை கண்காணித்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜூன் - செப்., வரை தென்மேற்கு மற்றும் அக்., - நவ., - டிச., மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது.
கடந்த 2022 டிச., மாதத்தைவிட, 2023, டிச., மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.
நான்கு பருவங்களிலும் பரவலாக மழை பெய்தாலும் சராசரி அளவை விட மழை குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2022 டிச., மாதத்தைவிட, 2023, டிச., மாதம் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 3.72 மீட்டரில் இருந்த நீர்மட்டம் 6.32 மீட்டராக சரிந்துள்ளது.கோவையின் நீர்மட்டம் 7.45 மீ.,-ல் இருந்து 9.84 மீட்டராகவும் 4.69 மீட்டரில் இருந்த திருப்பூரின் நீர்மட்டம் 7 மீட்டராகவும் 3.46 மீட்டரில் இருந்த நாமக்கல் நீர்மட்டம் 5.56 மீட்டராகவும், 2.86 மீட்டராக இருந்த சேலம் நீர்மட்டம் 4.63 மீட்டராகவும், 3.32 மீட்டராக இருந்த திருச்சி நீர்மட்டம், 5.06 மீட்டராகவும் 3.32 மீட்டரில் இருந்த பெரம்பலுாரின் நீர்மட்டம் 5.04 மீட்டராகவும் குறைந்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, ராணிபேட்டை ஆகிய பத்து மாவட்டங்களில் மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தில் 0.70 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.விவசாயம், தொழிற்சாலை குடிநீர் என பல்வேறு பயன்பாடுகளுக்கு நிலத்தடி நீர் கைகொடுத்து வருகிறது.
உறிஞ்சும் அளவுக்கு ஏற்ப நிலத்தடிக்கு, மழைநீர் சென்றுசேர்வது இல்லை. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பது மிக அவசியமாகிறது.