3 பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு 'டோஸ்' விட்ட நிதின் நபின்
3 பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு 'டோஸ்' விட்ட நிதின் நபின்
ADDED : ஆக 30, 2026 04:26 AM

புதுடில்லி: சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த காங்., மூத்த தலைவர் சஜ்ஜன் குமார், 80, உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பா.ஜ., லோக்சபா எம்.பி.,க்கள் மூன்று பேரை, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1984 அக்., 31ல் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, நாடு முழுதும் சீக்கியருக்கு எதிராக கலவரம் வெடித்தது.
இதில், 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையின் போது, டில்லியில் ஐந்து பேரை உயிருடன் எரித்துக் கொன்றதாக, காங்., முன்னாள் எம்.பி.,யும், கட்சியின் மூத்த தலைவருமான சஜ்ஜன் குமார் மீது வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கில், 2018 டிசம்பரில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 20ல், உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார்.
இந்த சூழலில், டில்லியைச் சேர்ந்த பா.ஜ., லோக்சபா எம்.பி.,க்கள் கமல்ஜீத் செஹ்ராவத், ராம்வீர் சிங் பிதுாரி, யோகேந்தர் சந்தோலியா ஆகியோர், மறைந்த சஜ்ஜன் குமாரின் வீட்டுக்கு சமீபத்தில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இது அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், ''மூன்று எம்.பி.,க்களும் சஜ்ஜன் குமாரின் வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் தான் சென்றனர். கட்சி சார்பில் செல்லவில்லை,'' என்றார்.
இந்த விவகாரம் பா.ஜ.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், கமல்ஜீத் செஹ்ராவத், ராம்வீர் சிங் பிதுாரி, யோகேந்தர் சந்தோலியா ஆகியோரை நேரில் அழைத்து, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. எதிர் காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என, அவர் எச்சரித்து அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
