3 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாறுவர்; ஜனாதிபதி முர்மு உரை
3 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாறுவர்; ஜனாதிபதி முர்மு உரை
UPDATED : பிப் 01, 2025 04:35 AM
ADDED : பிப் 01, 2025 01:58 AM

''மத்திய அரசின் திட்டங்களால் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாறிஉள்ளனர்.
'இந்த எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்த வேண்டுமென்பது அரசின் லட்சியம். உலகின் மூன்றாவது பொருளாதார பலம் வாய்ந்த நாடாக, இந்தியா விரைவில் மாற உள்ளது.
'நடுத்தர வர்க்க மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது,'' என, பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.
இதையொட்டி நடந்த பார்லிமென்ட் கூட்டு கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்வு, நேற்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் வந்தார்.
அவரை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
செங்கோல் ஏந்திய அதிகாரி, அனைவரையும் பாரம்பரிய முறைப்படி வரவேற்று அழைத்துச் சென்றார். இதன்பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அவரது உரையின் முக்கிய அம்சம்:
மூன்றாவது முறையாக தொடர்ந்து இந்த அரசு பதவிக்கு வந்துள்ளதைப் போலவே, முன்பு எப்போதும் இல்லாத வகையில், நாட்டின் வளர்ச்சியும் மும்மடங்கு வேகத்தில் செல்கிறது. அரசின் இடைவிடாத சிறப்பான நடவடிக்கைகளால் உலகின் மூன்றாவது பொருளாதார பலம் மிக்க நாடாக இந்தியா விரைவில் மாறவுள்ளது
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், நாடு முழுதும் உள்ள விவசாயிகளின் வாழ்வில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளுக்கு உதவித்தொகையாக, 41,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
கிராமப்புற ஏழைகளுக்கு, அவர்கள் வசித்து வரும் இடங்களுக்கான, 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களை வறுமையின் பிடியில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது
வீட்டு வசதி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதன் வாயிலாக, கூடுதலாக 3 கோடி குடும்பங்கள் பயன் அடையப்போகின்றன
வரும் 2047ல், வலிமையான, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வருவதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன
விளையாட்டு முதல் விண்வெளி வரையிலான ஒவ்வொரு துறையிலும், ஸ்டார்ட் அப் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா துவங்கி விட்டது
நாடு முழுதும் 10 கோடி பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளதன் வாயிலாக, சுய உதவிக் குழுக்கள் வெற்றி அடைந்துள்ளன. இந்த லக்பதி திதி யோஜனா வாயிலாக ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்த வேண்டுமென்பது அரசின் லட்சியம்
உதம்பூர் - பாரமுல்லா - ஸ்ரீநகர் ரயில் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில் போக்குவரத்து இணைப்பு விரைவில் ஏற்படும்
மிகப்பெரிய சாதனையாக, நாட்டின் மெட்ரோ ரயில் மொத்த பாதைகளின் நீளம் 1,000 கி.மீ., துாரத்தையும் தாண்டிவிட்டது. இதனால், உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ நெட்வொர்க் உள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது
தேசிய கல்வி திட்டம் வாயிலாக, மாணவர்களுக்கு நவீன கல்வி திட்டங்கள் தயாராகி வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -