பழைய பொருட்களுக்குள் 3 பாம்புகள்; ஏலம் எடுக்க வந்தவர்கள் அலறி ஓட்டம்
பழைய பொருட்களுக்குள் 3 பாம்புகள்; ஏலம் எடுக்க வந்தவர்கள் அலறி ஓட்டம்
ADDED : மார் 27, 2025 07:54 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2025 - 26ம் நிதியாண்டுக்கான பேருந்து, வேன் மற்றும் ஆட்டோக்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமம், பேருந்து நிலைய கழிப்பறை கட்டண வசூல், பழைய பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குத்தகை பொது ஏலம், நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்த ஏலத்தில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த பழைய பொருட்களை ஏலம் எடுக்க வந்தவர்கள் காண சென்றனர். அங்கிருந்த பழைய இரும்பு சட்டங்களில் இருந்து, பாம்பு ஒன்று எட்டி பார்த்தது. அதை கண்டதும், ஏலம் எடுக்க வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இரும்பு சட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்த போது, அதில் ஆறு அடி நீளமுள்ள மூன்று சாரை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. அவை மூன்றையும் ஒவ்வொன்றாக பிடித்து, ஏடூரில் உள்ள காப்புக் காட்டில் விடுவித்தனர்.
அதன்பின், ஒரு மணி நேரம் கழித்து, பேரூராட்சி அலுவலகத்தில் குத்தகை ஏலம் நடந்தது. பழைய பொருட்களில் இருந்து படையெடுத்த பாம்புகளால், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.