மதுரையில் 2 ஆண்டுகளில் 4 கமிஷனர்கள் 'தூக்கியடிப்பு'
மதுரையில் 2 ஆண்டுகளில் 4 கமிஷனர்கள் 'தூக்கியடிப்பு'
UPDATED : பிப் 12, 2024 06:00 PM
ADDED : பிப் 12, 2024 05:17 AM

மதுரை: மதுரையில் பொறுப்பேற்ற 3 மாதங்களில் நேர்மையாக பணியாற்றி மக்கள் பாராட்டை பெற்ற மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், திடீரென துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்த கமிஷனர் தினேஷ்குமார் மதுரைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்குள் ஆளும் கட்சியினரின் அரசியல் காரணமாக நேர்மையாக பணியாற்றிய 4 கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேயராக இந்திராணி பொன்வசந்த் 2022 மார்ச்சில் பதவியேற்றார். அப்போது பதவியில் இருந்த கமிஷனர் கார்த்திகேயன் சில நாட்களில் மாற்றப்பட்டார். அதன் பின் சிம்ரன்ஜித் சிங் காலோன் 2022 ஜூன் 1ல் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே மாற்றப்பட்டார். அவரையடுத்து பிரவீன்குமார் 2023 ஜூனில் பதவியேற்று, 4 மாதங்களில் துாக்கியடிக்கப்பட்டார்.
தற்போது 2023 அக்.,19ல் பதவியேற்ற கமிஷனர் மதுபாலனும் நான்கே மாதங்களில் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டுள்ளது. இங்கு பொறுப்பேற்கும் கமிஷனர், 100 வார்டுகளின் நிலமைகளையும், திட்டச் செயல்பாடுகள் குறித்தும் புரிந்து கொள்ளவே சில மாதங்கள் ஆகும்.
அதையும் தாண்டி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது கடமை. இதனால் பணியை பற்றி அறியும் முன்பே, நான்கு மாதங்களுக்கு ஒரு கமிஷனர் என மாற்றப்படுவது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன
மதுரையில் ஆளும் கட்சி அமைச்சர்களான மூர்த்தி, தியாகராஜன் இடையே அரசியல்ரீதியாக பனிப்போர் நடக்கிறது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மூர்த்தி, தியாகராஜன் ஆதரவாளர்களாக பிரிந்து கிடக்கின்றனர். நகர் செயலாளர் தளபதி ஆதரவாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இரு பக்கமும் செல்கின்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த், அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர்.
இந்த சூழலில் மாநகராட்சியில் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கனவில் வரும் இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அவர்களின் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாமல் 'உள்ளூர் அரசியலில்' சிக்கித் தவிக்கின்றனர்.
மதுரையில் 'ஆளும்கட்சி அதிகார மையங்களை' சமாளிப்பதே ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணியாக மாறிவிட்டது. ஆளும் கட்சிக்கு 'அட்ஜெஸ்ட்' செய்யும் அதிகாரி தான் தேவை என பிடிவாதம் காட்டும் அரசியல் போக்கால் தொடரும் இந்த கமிஷனர் மாற்றங்கள் மாநகராட்சி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமையும்.

