இ.பி.எஸ்., அளித்த விருந்தை புறக்கணித்த 4 எம்.எல்.ஏ.,க்கள்
இ.பி.எஸ்., அளித்த விருந்தை புறக்கணித்த 4 எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : ஏப் 25, 2025 05:17 AM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த விருந்தை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட, அக்கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர்.
கடந்த மார்ச் 14ல் துவங்கிய, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்.29ல் நிறைவு பெறுகிறது. அதையொட்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, அவரது இல்லத்தில், நேற்று முன்தினம் இரவு விருந்தளித்தார்.
அ.தி.மு.க.,வுக்கு 66 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் தவிர, மற்றவர்களுக்கு விருந்தில் பங்கேற்க, பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், சமீப காலமாக பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான, பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., பண்ணாரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களான வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜுனன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
அமைச்சர் பொன்முடியை கண்டித்து, விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால், விருந்தில் பங்கேற்க முடியவில்லை என, விழுப்புரம் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். பழனிசாமி தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தத்தில், செங்கோட்டையன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விருந்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் பேசியபோது, 'விருந்தின்போது அனைவரிடமும் பழனிசாமி சகஜமாகப் பேசினார். பா.ஜ., கூட்டணி ஏன் அமைக்கப்பட்டது; எப்படி அமைக்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் விளக்கமாகப் பேசினார். அமித் ஷா சந்திப்பின் போது பேசப்பட்ட தகவல்களையும் சொன்னார்.
விரைவில், அ.தி.மு.க., கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்ற தகவலையும் சொன்னார். கூடவே, தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அ.தி.மு.க., தலைமையில் அமையும் என்பதால், 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமையப் போவது உறுதி. எனவே, சட்டசபை தேர்தல் பணிகளை இப்போதே, உற்சாகமாக துவங்க வேண்டும். தேர்தலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அ.தி.மு.க., தலைமை செய்யும்' என தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.