UPDATED : பிப் 17, 2024 06:45 AM
ADDED : பிப் 17, 2024 01:45 AM

திருப்பூர்: பூண்டு விலை வழக்கத்துக்கு மாறாக கிடுகிடுவென உயர்ந்ததால், வீட்டில் சாம்பார், ரசம் கமகமக்காத சூழல் உள்ளது.
'பூண்டு இல்லையேல் ரசம் மணக்காது' என்பர்; பூண்டு இருந்தால் சாம்பார், குழம்பு, ரசம் கமகமக்கும். மருத்துவக் குணம் வாய்ந்ததால், பூண்டு அதிகளவில் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தாண்டு துவக்கத்தில், 200 முதல், 250 ரூபாய் இருந்த ஒரு கிலோ பூண்டின் விலை. தற்போது, 400 ரூபாயாகியுள்ளது. இதனால், தள்ளுவண்டி கடைகளில் பூண்டே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
திருப்பூருக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், தேனி மாவட்டம், வடுகபட்டி ஆகிய இடங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் இருந்து முதல் தர பூண்டு வாங்கி சிலர் விற்கின்றனர்.
கடந்தாண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் திடீர் வெள்ள பெருக்கு, வடமாநிலங்களில் தொடர் மழை காரணமாக பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் பூண்டு விளைச்சல் குறைந்தது. திடீரென மூன்றில் ஒரு பங்கு பூண்டு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது.
வாங்க தயக்கம்
பூண்டு வரத்து குறைந்தாலும், முதல் தர பூண்டு தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால், இரண்டாம், மூன்றாம் தர பூண்டு, அதைவிடத் தரம் குறைந்த பூண்டு, முதல் தரம் விலைக்கு விற்கப்படுகிறது. பார்ப்பதற்கு பளிச்சென இல்லாததால், விலை உயர்வாக இருப்பதால், இல்லத்தரசிகள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.