5 மாவட்டங்கள்… 177 இடங்கள்... கழிவுநீரால் பாழாகும் வைகை
5 மாவட்டங்கள்… 177 இடங்கள்... கழிவுநீரால் பாழாகும் வைகை
UPDATED : நவ 15, 2024 06:40 AM
ADDED : நவ 15, 2024 06:10 AM

ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பாசனத்திற்கு நீர் தந்து, மக்களின் தாகம் தீர்க்கும் வைகையாற்றின் அருமை தெரியாமல், ஐந்து மாவட்ட பகுதிகளிலும் கழிவுநீரை கலப்பதால் பாழாகி கொண்டிருக்கிறது வைகை.
நாம் கழிவை கொட்டி, சாக்கடை நீரை சேர்த்து வைகையில் 'கை வைத்ததால்' குடிக்க, குளிக்க, கால்நடைகளுக்கு பயன்படுத்த தகுதியில்லாத தண்ணீரை தந்து, பறவைகள், உயிரினங்கள் வாழ நாதியில்லாத நதியாகி கொண்டிருக்கிறது வைகை என்பது பெரும் சோகம்.
தமிழகத்தில் உள்ள 17 ஆற்றுப்பாசன வடிநிலங்களில் வைகையாறும் ஒன்று. மூல வைகை உருவாகும் தேனி மாவட்டம் வருஷநாட்டில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கலக்கியது. அதுவரை வைகையாற்றின் நீளம் 295 கி.மீ.,
வைகை வடிநிலத்திற்கு உட்பட்ட பெரியாறு அணை மூலம் 2 லட்சத்து 8228 ஏக்கர், வைகை அணை மூலம் ஒரு லட்சத்து 26ஆயிரத்து 164 ஏக்கர், பிற அணைகள் மற்றும் முறை சாரா பாசனம் உட்பட மொத்தம் 4 லட்சத்து 19ஆயிரத்து 398 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.
சமீபத்திய கணக்கெடுப்பு சொல்வதென்ன
மதுரையைச் சேர்ந்த பறவையியலாளர் ரவீந்திரன், சூழலியல், தாவரவியல், காட்டுயிர் ஆய்வாளர்கள் தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் குழுவினர் வைகையாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து ராமநாதபுரம் வரை 10 நாட்கள் களப்பயணம் செய்துள்ளனர்.
ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது: ஐந்து மாவட்டங்களில் உள்ள 134 ஊர்களுக்கு சென்று 36 இடங்களில் ஆற்றின் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினோம். 197 குழாய்கள் மூலம் வைகையாற்றுக்குள் கழிவுநீர் நேரடியாக கலப்பதை ஆவணப்படுத்தியுள்ளோம். 36 இடங்களில் நீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்த போது குடிப்பதற்கான தரத்தில் எதுவும் இல்லை.
மரங்களை காணவில்லை
தேனியில் அம்மச்சியாபுரம் துவங்கி அணைக்கரைப்பட்டி வரையும் மதுரையில் விளாங்குடி துவங்கி சிலைமான் வரையும் ஆற்றுமணல் பரப்பு இல்லை. மதுரை மாநகராட்சியில் வெண்மணல் பரப்பை காணவில்லை. மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வரும் வைகையின் இரு கரைகளில் 8 கி.மீ., துாரத்திற்கு ஆற்றங்கரையில் மரங்கள் இல்லை. நன்னீரில் வளரும் நாணல் புற்கள், பேய்க்கரும்பு புற்கள் மதுரையில் காணப்படவில்லை. தேனி முதல் துவரிமான் வரையும் திருப்புவனம் துவங்கி மந்தி வலசை வரையும் நாணற்புற்கள் வளர்கின்றன. மாசுபட்ட நீரில் வளரும் சம்பை புல், ஆகாயத்தாமரை மதுரையில் பரவலாக வளர்ந்துள்ளது.
ஆவணப்படுத்தப்பட்ட 175 வகை பறவைகளில் 12 வகை பறவைகள் அழியும் பட்டியலில் உள்ளன. நன்னீரில் வாழும் வெண்கொக்கு, செந்நாரை பறவை எண்ணிக்கை குறைந்துள்ளன. அதற்கு பதிலாக கழிவுநீரிலுள்ள தாவரம், புழு, பூச்சிகளை உண்டு வாழும் நாமக்கோழி, அரிவாள் மூக்கன் பறவையினங்கள் அதிகரித்துள்ளன. 58 வகையான நன்னீர் மீன்களில் 11 வகை அழிவு பட்டியலில் உள்ளன. ராமநாதபுரம் ஆற்றங்கரை பகுதியில் இறால் பண்ணைகளின் கழிவுநீர் நேரடியாக விடப்படுவதால் கழிமுக உயிரினங்களின் உயிரிச்சூழல் பாதிக்கப்படுகிறது. மீனவர்கள் அழற்சியால் பாதிக்கப்படுகின்றனர்.
தண்ணீரும் தரமில்லை
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீரின் தரத்தை ஐந்து வகைகளாக பிரித்துள்ளது. 'ஏ' வகை நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிக்கலாம். 'பி' வகை நீரை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். 'சி' வகையில் சுத்திகரிப்பு செய்து குடிக்கலாம். 'டி' வகையில் கால்நடை, மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம். 'இ' வகையில் வேளாண்மை, தொழிற்சாலை உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.
தேனியில் துவங்கி ராமநாதபுரம் வரை 36 இடங்களில் ஆற்றுநீரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினோம். அனைத்து நீர் மாதிரிகளும் குடிக்க, குளிக்க, கால்நடைகளுக்கு பயன்படுத்த தகுதியில்லாதவை. வைகையாற்று நீரின் தரம் மேம்படுத்த வேண்டும் என்றால் கழிவுநீர் கலப்பதை மாநகராட்சி, நகராட்சிகள் நிறுத்த வேண்டும் என்றனர்.
வைகையாற்றை மீட்டெடுக்கும் வகையில் ரூ.5510 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தை தயாரித்துள்ளனர் நீர்வளத்துறையில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தினர். இத்திட்டம் குறித்து சங்க உறுப்பினர் பைந்தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
வைகையாற்று நீரிலுள்ள உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் (பி.ஓ.டி.,) அளவு குறித்து கடந்தாண்டு மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளதை அபாய குறியீடாக பார்க்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் எத்தனை மில்லிகிராம் மாசு உள்ளது என்பதன் அடிப்படையில் குறியீடு 10க்குள் இருந்தால் ஆற்றுத் தண்ணீரை சுத்திகரிக்க வேண்டியதில்லை, பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் மதுரை செல்லுாரில் 74.3 மி.கி., பரமக்குடியில் 109.4 மி.கி., என தண்ணீர் ஆபத்தான மாசடைந்த நிலையில் உள்ளது.
கழிவுநீர் மேலாண்மையே தீர்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர்ப் பாதையை ஆற்றுக்குள் விடாமல் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக மாற்றி வேறிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும். புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் கலக்காமல் வேறிடம் கொண்டு செல்லலாம்.
வைகையாற்றின் கரைகளை பலப்படுத்தி பூங்கா, கழிப்பறை வசதிகள் அமைக்க வேண்டும். இப்படி பல்வேறு திட்டங்களுக்கு ரூ.5510 கோடி வரை மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் வைகையை துாய்மைப்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரமேஷ் இடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தலைமை பொறியாளர், கண்காணிப்பு, செயற்பொறியாளர்கள் ஒருங்கிணைந்து இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும். என்றார்.