5 லட்சம் ஓட்டு வித்தியாசம்: குஜராத்தில் பா.ஜ., தீவிரம்
5 லட்சம் ஓட்டு வித்தியாசம்: குஜராத்தில் பா.ஜ., தீவிரம்
UPDATED : மார் 07, 2024 05:34 AM
ADDED : மார் 06, 2024 11:23 PM

லோக்சபா தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்ற நிலையில், குஜராத்தின் கள நிலவரம் இப்போதே தெளிவாக உள்ளது.
கடந்த, 2014 மற்றும் 2019 தேர்தல்களில், 26 தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது. வரும் தேர்தலிலும், 26 தொகுதிகளும் நிச்சயம் என்பதில், மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.படேல் நம்பிக்கையுடன் உள்ளார்.
தற்போது, அவருடைய இலக்கு, அனைத்து தொகுதிகளிலும், அனைத்து வேட்பாளரும், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது தான். மிகுந்த தன்னம்பிக்கையுடன், பா.ஜ., தீவிர பணியாற்றி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, காங்கிரசின் நிலைமை மோசமாக உள்ளது; 2009 தேர்தலில், 15 இடங்களில் வென்ற காங்கிரஸ், கடந்த இரண்டு தேர்தல்களில் காணாமல் போனது.
காங்., முன்னாள் தலைவர் ராகுலின், பாரத ஒற்றுமை நியாய யாத்திரை, குஜராத்தில் இன்று துவங்க உள்ளது. இந்நிலையில், கட்சியின் பல முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகின்றனர். அதோடு நேராக பா.ஜ., அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியில் சேர்ந்து விடுகின்றனர்.
இன்னொரு பக்கம், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. பரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளில், ஆம் ஆத்மியும் மற்ற இடங்களில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.
காங்கிரசின் மறைந்த மூத்த தலைவர் அஹமது படேலின் சொந்த ஊரான பரூச் தொகுதி கைவிட்டு போனது, அவரது குடும்பத்தார் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதது மற்றும் தொடர் தோல்விகளால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர்.
அதே நேரத்தில், கடந்த பல ஆண்டுகளாக, மோடி என்ன சொல்கிறாரோ அதை செய்ய, குஜராத் மக்கள் காத்திருக்கின்றனர் என்பது முந்தைய தேர்தல்களில் இருந்து தெரிகிறது.
- நமது நிருபர் -

