ADDED : ஏப் 18, 2024 03:30 AM

வழக்கமாக தேர்தல் வந்து விட்டால், தினமும் வேலை பார்ப்பதற்கு, வேட்பாளருடன் போவதற்கு, தலைவர்கள் வரும்போது கூட்டம் காட்டுவதற்கு, தொண்டர்கள் கூடி விடுவார்கள். ஆனால் கழகங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளைப் போல மாறிவிட்டதால், கழகக் கண்மணிகளும், உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் இப்போது காண்ட்ராக்ட் ஊழியர்கள் போலாகிவிட்டார்கள். கட்சிக்கும் நிதி கொடுத்து, சீட் வாங்கி, தேர்தலுக்கு என்று பணத்தை ஒதுக்கி வைக்கும் அளவுக்கு பணக்காரர்களாக இருப்பது சிலர் மட்டுமே.
இப்படிப் பணம் வைத்திருப்பவர்கள் தான், கெத்து காட்டுவதற்காகவே, தினமும் பல ஆயிரம் பேரை, தினக்கூலி அடிப்படையில் கூப்பிட்டு வந்து கூட்டம் காட்டுகின்றனர். அதிலும் இந்த முறை, வீடு வீடாக நோட்டீஸ் கொடுப்பதற்கே, கல்லுாரி மாணவர்களை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து ஏரியா பிரித்து எத்தனை வீடுகளுக்கு நோட்டீஸ் தர வேண்டுமென்று சொல்லி அனுப்பி விடுகின்றனர்.
அந்த வகையில், இந்தத் தேர்தலில், தினமும் 'வாலண்டியராக' வருவோர்க்கும், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சம்பளமும் சாப்பாடும் தரப்பட்டுள்ளது. பேரணிக்கு வண்டியுடன் வந்தால் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.
இதனால் இந்தத் தேர்தலில் வண்டி வைத்துள்ள தொண்டர்களைத் தவிர்த்து, கட்சியே சாராத கல்லுாரி மாணவர்கள் பலரும் பேரணியில் திரளாகப் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையாக இருப்பதால், எந்தக் கட்சியிலிருந்து பேரணிக்குக் கூப்பிட்டாலும், நண்பர்களுடன் பகிர்ந்து வண்டியுடன் வந்து குவிந்து விடுகின்றனர்.
ஆனால் வாகன பேரணி கூட்டத்தைப் பார்த்து, வாக்காளர்கள் ஓட்டுப்போடுவார்களா என்பது கேள்விக்குறியே!

