ஜப்பான் உதவியுடன் 7,000 கி.மீ., நீளத்திற்கு அதிவேக ரயில் திட்டம்
ஜப்பான் உதவியுடன் 7,000 கி.மீ., நீளத்திற்கு அதிவேக ரயில் திட்டம்
ADDED : ஆக 17, 2025 01:14 AM

புதுடில்லி:ஜப்பான் உதவியுடன் அதிவேக ரயில் திட்டங்கள் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் ரயில்வே துறை வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தந்த முக்கியத்துவத்தால், 'வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத்' போன்ற புதிய விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிய நாடான ஜப்பான் நிதி உதவியுடன் மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை, 509 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படுகிறது. இது, இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயில் பாதை. இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை 'ஷின்கன்சென் இ10' வகை புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லும்.
இது, 2027ல் தயாராகி விடும். இந்த நவீன புல்லட் ரயில் ஜப்பான், இந்தியாவில் 2030ல் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 'ஷின்கன்சென்' ரயில் இயக்கம் பற்றி இந்திய டிரைவர்களுக்கு ஜப்பான் பயிற்சி அளிக்க உள்ளது.
பிரதமர் மோடி ஆக., 29ல் ஜப்பான் செல்கிறார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடன் ரயில்வே திட்டங்கள் பற்றி பேச உள்ளார். 2047ல் சுதந்திர தின நுாற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முன், 7,000 கி.மீ., நீளத்திற்கு அதிவேக ரயில் பாதையை அமைக்க இந்தியா திட்டமிடுகிறது.
இது, ஜப்பானின் ஷின்கன்சென் ரயில் 'நெட்வொர்க்'கின் மொத்த நீளத்தை விட இரு மடங்கு அதிகம். முதல் கட்டமாக டில்லி - வாரணாசி இடையே அதிவேக ரயில் பாதையை அமைக்க ஆய்வுகள் நடக்கின்றன.
புதிதாக அதிவேக ரயில் பாதை அமைக்க, ஜப்பான் தரப்பில் ஏல விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இந்தியா எதிர்பார்க்கிறது.
மோடி - இஷிபா பேச்சின் போது ரயில்வே கட்டமைப்பு தவிர, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது, 'செமி கண்டக்டர்' உற்பத்தியை அதிகரிப்பது, பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்படும்.