50 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,360 உயர்வு
50 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,360 உயர்வு
UPDATED : பிப் 21, 2025 05:04 AM
ADDED : பிப் 21, 2025 01:19 AM

சென்னை:தமிழகத்தில் கடந்த 50 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 7,360 ரூபாய் அதிகரித்துள்ளது. இவ்வளவு குறுகிய நாட்களில், தங்கம் விலை இந்தளவுக்கு அதிகமாக அதிகரித்தது, இதுவே முதல் முறை.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 11ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,060 ரூபாய்க்கும்; சவரன், 64,480 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்சபட்ச விலையாக இருந்தது.
நேற்று முன்தினம் சற்று குறைந்து, தங்கம் கிராம், 8,035 ரூபாய்க்கும்; சவரன், 64,280 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 8,070 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 64,560 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 109 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி, தங்கம் கிராம், 7,150 ரூபாய்க்கும்; சவரன், 57,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த 50 நாட்களில் மட்டும் கிராமுக்கு 920 ரூபாயும், சவரனுக்கு 7,360 ரூபாயும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்துள்ளது.