உடல் உறுப்புகள் எடுத்துச்செல்ல 125 கி.மீ., வேகத்தில் பறக்கும் 'ட்ரோன்'
உடல் உறுப்புகள் எடுத்துச்செல்ல 125 கி.மீ., வேகத்தில் பறக்கும் 'ட்ரோன்'
ADDED : ஜன 09, 2024 01:00 AM

சென்னை: தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை, மணிக்கு 125 கி.மீ., வேகத்தில் எடுத்துச் செல்லும் திறன் பெற்ற, சிறிய வகை ஆளில்லா விமானம், 'ட்ரோன்' முதலீட்டாளர் மாநாட்டில் இடம் பெற்றது.
தஞ்சாவூரை சேர்ந்த 'யாளி ஏரோஸ்பேஸ்' நிறுவனம், இந்த வகை ட்ரோன்களை வடிவமைத்துள்ளது. அந்நிறுவனத்தை நடத்தி வரும் தினேஷ், 32 கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் படித்து, ஜெர்மனியில், 10 ஆண்டுகளாக பணியாற்றினேன்.
அந்த நாட்டில், தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை எடுத்துச் செல்ல, ட்ரோன் வசதி அதிகம். இந்த தொழில்நுட்ப வசதியை நம் நாட்டில் கொண்டு வர திட்டமிட்டு, புதிய ட்ரோனை உருவாக்கி உள்ளோம்.
ஒரே நேரத்தில், 7 கிலோ உடல் உறுப்புகளை, மணிக்கு 125 கி.மீ., வேகத்தில் கொண்டு செல்ல முடியும். சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு மூன்றரை மணி நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.