UPDATED : ஜன 17, 2024 01:10 PM
ADDED : ஜன 16, 2024 06:22 AM
'அக்கா...பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுனீங்க...'' என கேட்டவாறே, மித்ரா, சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள்.
''அதெல்லாம் சூப்பரா கொண்டாடியாச்சு...'' என்ற சித்ரா, ''இன்னைக்கு மாட்டு பொங்கல்டி. பெருமாநல்லுார் பக்கத்திலுள்ள என் பிரண்ட் தோட்டத்துக்கு போலாம் வாடி...'' என்றவாறே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.
பின்னாளில் உட்கார்ந்தாவறே, ''அக்கா, ஒரு நல்ல ஓட்டலா பாத்த நிறுத்துங்க. டிபன் சாப்பிட்டு போலாம்,''என்றாள் மித்ரா.
''மித்து, இப்பெல்லாம், ஓட்டலை விட 'மெஸ்'கள்ல தான் கூட்டம் அதிகமா இருக்கு மித்து...''
''நீங்க சொல்றது, 'கரெக்ட்' தான் அக்கா. அங்கங்க நிறைய 'மெஸ்'ங்க இருக்கு. பனியன் கம்பபெனியில வேல பார்க்குற நிறைய பேரு, ரெகுலர் கஸ்டமரா இருக்காங்க. விலை குறைவு தான்; ஆனா, தரம் எப்படின்னு தெரியல. சில மெஸ்கள்ல தரமா, சுத்தமாக உணவு தயாரிச்சு, சப்ளை பண்றாங்க. சில மெஸ்களில், டேபிள் துடைக்கிறவங்க, இலை எடுக்கறவங்கேள தான் உணவும் பரிமாற்றாங்க.
சில 'மெஸ்'களோட கிச்சன் எல்லாம், ரொம்ப மோசமா இருக்கு. எல்லா 'மெஸ்'களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிங்க, ஒரு ரவுண்டு போய் பார்த்தாங்கன்னா நல்லா இருக்கும்,'' என்றாள் மித்ரா.
''காளான் பிரியாணி 'ஆர்டர்' செய்த மித்ரா, ''என்னக்கா... எலக்ஷன் சூடு பிடிச்சிடுச்சு போலயே...'' என பேச்சை துவக்கினாள் மித்ரா.
ஆளுங்கட்சி ஆட்கள் அலப்பறை
''ஆமா மித்து, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழா முடிஞ்ச கையோட, எலக்ஷன் அறிவிக்கவும் வாய்ப்பு இருக்குன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''நம்ம டிஸ்ட்ரிக்டில், அதிக ஓட்டு வாங்கித் தரணும்னு, லோக்கல்ல இருக்க ரெண்டு மினிஸ்டருக்கும் கட்சித்தலைமை 'டார்கெட்' வெச்சுட்டாங்க. சேதி சொல்ற மினிஸ்டர் அமைதியா, ஆர்ப்பாட்டம் இல்லாம அரசியல் பண்ணாக்கூட, அவரு பேரை சொல்லிக்கிட்டு, சில கட்சிக்காரங்க பண்ற அலப்பறை தாங்க முடியலையாம்,''
''காங்கயத்துல, ஒன்றிய லேடி கவுன்சிலரோட வீட்டுக்காரர் ஒருத்தரு, தனி ராஜாங்கம் நடத்திட்டு வர்றாராராம். என்னதான் நகரம், ஒன்றியம்ன்னு நிர்வாகிங்க இருந்தாலும், ''கட்சியில எல்லாமே நான் தான்; என்னை மீறி எதுவும் நடக்காது''ன்னு, 'கெத்து' காட்டறாராம்...''
''அதே மாதிரி, 'அவை' பொறுப்புல இருக்க நிர்வாகி ஒருத்தரும், மினிஸ்டர் பேரை சொல்லிக்கிட்டு, சார்பு அணியில இருக்க 'முத்தான' பேரு வைச்சிருக்க ஒருத்தரும், டாஸ்மாக்'பார்'ல கல்லா கட்றது; மண் கடத்தலுக்கு 'சப்போர்ட்' பண்றதுன்னு, 'அட்ராசிட்டி' பண்றாங்களாம்'' என்றாள் மித்ரா.
''அங்க மட்டும் இல்ல மித்து. ஊருக்கு நாலு பேரு, இப்டித்தான் தான் செய்றாங்க. அவங்கன்னால கட்சிக்கு தான கெட்டப் பேரு. இதெல்லாம் மினிஸ்டருக்கு தெரியாமலா இருக்கும். கண்டிச்சு வைக்க வேண்டாமா...'' என 'உச்' கொட்டினாள் மித்ரா.
'காக்கி'களின் கட்டப்பஞ்சாயத்து
''கட்சிக்காரங்க தான் இப்டி பண்றாங்கன்னா, காக்கிச்சட்டைக்காரங்க கூட பெரிய ஆபீசர் பேரை சொல்லி, வசூல் அள்றாங்களாம். தாராபுரம் ஸ்டேஷன்ல, 'க்ரைம் செக்ஷன்'ல இருக்க ரெண்டு போலீஸ்காரங்க வைக்கிறது தான் அங்க சட்டமாம். அங்க இருக்க பெரிய ஆபீசரே, இவங்க பேச்சை கேட்டுதான் நடந்துக்கிறாராம்...''என்றாள் சித்ரா.
''கட்டப்பஞ்சாயத்துன்னு நீ சொல்லவும் தான், எனக்கொரு 'மேட்டர்' ஞாபகம் வருதுங்க்கா. பெருமாநல்லுார்ல, 14 வயது சிறுமிக்கு அதே பகுதியில இருக்க ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்திருக்காரு. இது சம்மந்தமா, அந்த சிறுமியோட பேரன்ட்ஸ் போலீஸ்ல புகார் கொடுக்க, அந்த சில்மிஷ ஆசாமி மேல, 'போக்சோ' கேஸ் போட முடிவு பண்ணிட்டாங்களாம்,''
''ஆனா, அவிநாசியில இருக்க தாமரைக்கட்சி நிர்வாகி ஒருத்தர், இதுல மூக்கை நுழைச்சு, 'கேஸ் எதுவும் போட வேண்டாம்'ன்னு, கட்டப்பஞ்சாயத்து பேசிட்டு இருக்காராம்'' என்றாள் மித்ரா.
''அவங்களும், இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா'' என, 'உச்' கொட்டிய சித்ரா, ''நானும் ஒரு அவிநாசி மேட்டர் சொல்றேன். எம்.எல்.ஏ., ஆபீசில இருந்து, மடத்துப்பாளையம் பிரிவு வரை, ரோடு அகலப்படுத்தற வேலை நடக்குது,''
''இதுல தோண்டப்பட்ட மண்ணை, கான்ட்ராக்டர், வித்து காசாக்கிட்டு இருந்தாராம். இத தெரிஞ்சுக்கிட்ட ைஹவேஸ் ஆபீசர்ஸ், இப்படியெல்லாம் செய்யக்கூடாது. மண்ணை கண்காணிப்புல வைக்கணும்ன்னு சொல்லிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''இதே மாதிரி தான், பல்லடம் பக்கம் கரைப்புதுாரில, பாறையை உடைச்சு, வித்துடலாம்ன்னு சிலர் பிளான் போட்டிருக்காங்க. ஆனா, அந்த பாறைக்கு 'வேல்யூ' அதிகமாம். கான்ட்ராக்ட்ர், அதிகாரிகளோட சேர்ந்து, லோக்கல் கட்சிக்காரங்க சிலரும் சம்மந்தப்பட்டிருந்தாங்களாம்,''
''இந்த விஷயம் வெளியில 'லீக்' ஆனதுல, 'ரெவின்யூ' ஆபீசர்ஸ் உஷாராகிட்டாங்களாம். ஸ்கூல் கட்ற வேலைக்கு இடையூறா இருக்கிறதால தான், பாறையை உடைச்சோம்ன்னு, ரெவின்யூக்காரங்க சப்பைக்கட்டு கட்டியிருக்காங்க. அப்புறமா உடைச்ச பாறைகளை அங்கேயே போட்டு, குழியை மூடிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
விழி பிதுங்கிய அதிகாரிகள் கிலி
சுடச்சுட காளான் பிரியாணி வரவே, இருவரும் சாப்பிட துவங்கினர் இருவரும். ஓட்டலில் இருந்து டிவி., திரையில், 'கேலோ இந்தியா' தொடர்பான வாகன பிரசார செய்தி, ஒளிபரப்பானது.
''இந்த முறை தமிழ்நாட்ல கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடக்கறதால, சிறப்பா நடத்தி முடிக்கணும்னு விளையாட்டுத்துறை அமைச்சரு சொல்லியிருக்காராம். இதுக்காக விழிப்புணர்வு வாகன பிரசாரமும் செய்யறாங்க...''
''நம்ம மாவட்டத்துல, சிக்கண்ணா காலேஜ் மைதானத்துல, வாகன பிரசார துவக்க விழா நடந்திருக்கு. இந்த நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு பண்ணுச்சா. மாவட்ட விளையாட்டுத்துறை ஏற்பாடு பண்ணுச்சா இல்ல காலேஜ்காரங்க ஏற்பாடு பண்ணாங்களானன்னு தெரியலையாம். நிகழ்ச்சிக்கு வந்த லோக்கல் மினிஸ்டர், மத்த அதிகாரிகளைய யாரு வரவேற்க, யாரு போறதன்னும் தெரியாம திணறிட்டாங்களாம்...''
பள்ளிக்கு 'ஆப்சென்ட்'... பெற்றோர் 'அப்செட்'
''காலேஜ் பத்தி நீ பேசவும் தான் எனக்கு 'மங்கல'கரமான ஸ்கூல் மேட் டரு ஒன்னு ஞாபகத்துக்கு வருது. அங்க ஆயிரக்கணக்குல பசங்க படிக்கிறங்க. அங்க இருக்க டீச்சரை, உடுமலையில இருக்க ஒரு ஸ்கூலுக்கு 'இன்சார்ஜ்' போட்டிருக்காங்களாம்,''
''ஆனால், எச்.எம்., அங்கேயே தான் இருக்காங்களாம். வாரத்துக்கு ரெண்டு நாள் வர்றதே பெரிய விஷயம்ன்னு சொல்றாங்க. 'எங்களுக்கு நிரந்தரமா எச்.எம்., இருக்க மாதிரி ஏற்பாடு பண்ணுங்க'ன்னு, பேரன்ட்ஸ் கேக்கிறாங்களாம். என்ன பண்றதுன்னு தெரியாம ஆபீசர்ஸ் முழிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
'பில்' செட்டில் செய்து, ஓட்டலை விட்டு வெளியேறி இருவரும், புறப்பட்டனர். அப்போது, ''சித்ராக்கா. நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ் வரைக்கும் போகணும். வர்றீங்களா? '' என்றாள் மித்ரா.
''போலாம் மித்து. பத்திரப்பதிவு விவகாரங்கள்ல ஏதாவது பிரச்னை இருந்தா, மாவட்ட பதிவாளருகிட்ட மனு கொடுத்து, தீர்வு காணலாம்ன்னு, விதிமுறை இருக்கு. திருப்பூர்ல இருக்க ஒருத்தரு, பல்லடத்துல இருக்க சொத்து பத்திரத்தை ரத்து செய்யணும்ன்னு மனு கொடுத்திருக்காரு,''
''ரொம்ப நாள் கழிச்சு, மாவட்ட ஆபீசர் அதுக்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்காரு. ஆனா, அதுல திருப்தியில்லாததால, மனுதாரரு, பெரிய ஆபிசர் கவனத்துக்கு கொண்டு போயிருக்காரு. ஆனா, எந்த விசாரணையும் நடத்தாம, அதே முடிவை அவரும் சொல்லியிருக்காராம். இதனால, மனு கொடுத்தவரு நொந்து போயிட்டாராம்...'' என்றாள் மித்ரா.
மித்ரா தனது வீட்டில் இறங்கி கொள்ள, ஸ்கூட்டரை விரட்டினாள் சித்ரா.