பாழாகும் பாரம்பரிய பெருமை: அழிவின் விளிம்பில் சென்னை கன்னிமாரா நூலகம்
பாழாகும் பாரம்பரிய பெருமை: அழிவின் விளிம்பில் சென்னை கன்னிமாரா நூலகம்
ADDED : ஜன 27, 2026 08:29 AM

- நமது நிருபர் -
சென்னையின் அறிவுக் கருவூலமாகவும், பாரம்பரிய அடையாளமாகவும் திகழும் கன்னிமாரா நுாலகம், அரசின் பாராமுகத்தாலும், ஆள் பற்றாக்குறையாலும் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ள நுாலகத்தை, சிறப்பு கவனம் செலுத்தி அரசு பாதுகாக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில், 140 ஆண்டு கால பாரம்பரியம் உடையது கன்னிமாரா நுாலகம். பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாண கவர்னர் ராபர்ட் போர்க் கன்னிமாராவின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. பிரிட்டனில் இருந்து எடுத்துவரப்பட்ட அரிய ஆவணங்கள், சென்னையில் இயங்கிய சென்னை பல்கலை நுாலக ஆவணங்கள் மற்றும் சென்னை லிட்டரரி சொசைட்டி நுாலக ஆவணங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது கன்னிமாரா நுாலகம்.
கவர்னர் கன்னிமாராவுக்காக, ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து பளிங்கு கற்களை பகிங்ஹாம் கால்வாய் வழியாக எடுத்து வந்து, 27,000 சதுரடியில் தரைப்பகுதி உருவாக்கப்பட்டது. அதற்கு மேலே அரைவட்டவடிவில் ஒளி உட்புகும் வண்ணக்கண்ணாடி கூரையையும் அமைத்து, இந்தோ சார்சனிக் முறையில் கட்டடத்தைக் கட்டி, அதில், 2.50 லட்சம் புத்தகங்களை வைக்க, தேக்கு மர அலமாரிகளையும் செய்து தந்தவர், கட்டடக் கலைஞர் இர்வின்.
கடந்த, 1886ல் திறக்கப்பட்ட இந்த நுாலகம், 1929க்கு பின், அருங்காட்சியகங்கள் துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி நுாலகமாக அங்கீகரிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பின், தற்சார்பு நுாலகமாக்கப்பட்டு, பொது நுாலக இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. தமிழகத்தின் முதல் மைய நுாலகமாக அங்கீகரிக்கப்பட்ட இது, பள்ளிக்கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் தற்போது செயல்பட்டு வருகிறது.
இதையும், பிரிட்டிஷார் உருவாக்கிய கொல்கட்டா, மும்பை, டில்லி மாகாண நுாலகங்களையும், கடந்த 1954ல், தேசிய வைப்பு நுாலகமாக அங்கீகரித்தது மத்திய அரசு. அதாவது, நாட்டில் எங்கு, எந்த மொழியில் ஒரு புத்தகமோ, பத்திரிகையோ அச்சானால், அதன் ஒரு படியை இந்த நுாலகங்களுக்கு வழங்க வேண்டும் என்பது விதி.
மத்திய அரசு நிதி
அதன் அடிப்படையில், மற்ற நுாலகங்களில் தற்போது இதழ்களும், நுால்களும் குவிந்து, பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, நுாலகங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் வளர்ந்து நிற்கின்றன. ஆனால், தேசிய வைப்பு நுாலகத்துக்கான மத்திய அரசின் நிதியை பெற்றால், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கன்னிமாரா நுாலகம் சென்றுவிடும் என்ற காரணத்தைக் கூறி, ஏற்கனவே தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.
அப்படி செய்த தமிழக அரசு, கன்னிமாரா காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டடத்தை, பழமை மாறாமல் பராமரித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாததால், எப்போது இடிந்து விழும் என்ற நிலையில்தான் தற்போது உள்ளது. காரணம், 1973 மற்றும் 1999களில், தமிழக அரசால், அந்த பாரம்பரிய கட்டடத்தின் அருகில், தலா மூன்று தளங்களுடன் இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. அவைதான் தற்போது கன்னிமாரா நுாலகம் என்ற அடையாளத்துடன் நிற்கின்றன.
இது குறித்து, கன்னிமாரா நுாலக ஊழியர்கள் கூறியதாவது: சென்னையில், 150க்கும் மேற்பட்ட கிளை நுாலகங்கள் உள்ளன. அவற்றின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, கன்னிமாரா நுாலக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு, 3,500க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள், 160க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் வருகின்றன.
ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் நுால்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான வாசகர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், போட்டித்தேர்வர்கள் தினமும் வந்து செல்கின்றனர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கன்னிமாரா நுாலகத்தின் நிரந்தர வாசகராக இருந்தவர்.
தம்பட்டம்
அப்படிப்பட்ட நுாலகத்தை நிர்வகிக்க போதுமான ஆட்கள் இல்லை. பழைய பாரம் பரிய கட்டடத்தின் படிக்கட்டுகளும், கூரையும் இற்றுவிட்டன. அங்குள்ள அரிய ஆவணங்களை உரிய வேதியியல் பராமரிப்பு செய்ய ஆட்கள் இல்லை. புதிய கட்டடத்தில் உள்ள நுால்களை அவ்வப்போது அட்டை கட்டி, உரிய இடங்களில் அடுக்கி பராமரிக்கவும் ஆட்கள் இல்லை. இங்குள்ள நுால் விபரப்பட்டியல் புதுப்பிக்கப்படாமல், கன்னிமாரா நுாலகத்தின் இணையதளமும் பல ஆண்டுகளாக முடங்கி உள்ளது.
இது, ஆய்வாளர்களுக்கு நேர விரயத்தையும், பணியாளர்களுக்கு பணிப்பளுவையும் ஏற்படுத்துகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள 4,000 பொது நுாலகங்களைவிட மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஆனால், கட்டடத்தின் பொருட்களை முதல் மாடிக்கும், இரண்டாம் மாடிக்குமாக மாற்றிப்போட்டு, தரைத்தளத்தில் பொம்மைகளை வரைந்து, இருக்கைகளையும், குழந்தைகளுக்கான நுால்களையும் இடம் மாற்றி வைத்துவிட்டு, புதிய கட்டடம் கட்டியது போல் பள்ளிக்கல்வித் துறை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.
தன் தந்தையின் பெயரில் பெரிய நுாலகங்களை கட்டி, தொண்டர்களிடம் நுால்களை பரிசாகப்பெறும் முதல்வர் ஸ்டாலின், வீட்டுவசதி வரியின் 10 சதவீதத்தை, நுாலக வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதியை கடைப்பிடித்து, ஏற்கனவே உள்ள நுாலகங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நுாலகம் கண்டுகொள்ளப்படாத காரணம் என்ன?
பாரம்பரியமான கன்னிமாரா நுாலகத்துக்கு, பல ஆண்டுகளாக நிரந்தர நுாலகர் நியமிக்கப்படவில்லை. தற்காலிக உதவி நுாலகர்தான் அந்த பொறுப்பில் உள்ளார். அவர், நுாலகராகும் கல்வி தகுதி இல்லாமலும், அவருக்கு கீழ் நிலையில் உள்ளோரில் சிலர், உரிய கல்வித் தகுதியுடனும் உள்ளனர்.
ஆதனால், உதவி நுாலகர் ஓய்வு பெற்றால் மட்டுமே, அடுத்தவர் நுாலகர் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உள்ளது. இந்த பிரச்னையைத் தீர்க்க, சிறப்பு அனுமதியுடன், இதே நுாலகத்தில் உரிய கல்வி, முன் அனுபவம் உள்ளவர்களுக்கு இணை பணியிடங்களை உருவாக்கி, அந்த நிலைக்கு உயர்த்த வேண்டும். ஆனால், தேவநேய பாவாணர் நுாலக நுாலகரே இதற்கும் பொறுப்பாளராக உள்ளதால், இந்த நுாலகம் புறக்கணிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, நாட்டின் மிக முக்கிய நான்கு நுாலகங்களில் ஒன்றான இதில், 120 ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். தற்போது, 42 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களிலும், 20 பேர், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்துக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.
நுாலகத்திற்குள் மட்டும்தான் இப்படி இல்லை. நுாலக வளாகத்தில், வாசகர்களுக்கு நிழல் தந்த பிரமாண்ட மரங்களும் மார்க்ஸ் சிலைக்காக வெட்டி அகற்றப்பட்டு உள்ளன.

