UPDATED : டிச 28, 2025 06:38 AM
ADDED : டிச 28, 2025 03:14 AM

பக்கத்து நாட்டு தலைமை நீதிபதி சமீபத்தில் டில்லி வந்திருந்தார். அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதில் மத்திய அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர். வட்ட வட்ட டேபிள்களில், அதிகாரிகள் அமர்ந்து, 'கிசுகிசு' பேசியபடி சாப்பிட்டனர்.
அரசியல்வாதிகளுக்கு மக்களின் மனநிலை எந்த அளவிற்கு தெரியுமோ, அதை விட அதிகம் தெரிந்து வைத்திருப்பவர்கள் இந்த அதிகாரிகள். ஒரு டேபிளில், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களின் பேச்சு, 2026 தமிழக சட்டசபை தேர்தல் பக்கம் திரும்பியது.
ஒரு சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரி, 'நான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்தேன். அவர், 'பழனிசாமி, தி.மு.க.,வின் ஆள்' என சொல்கிறார்; இதை உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்தேன்' என்றார். இதை கேட்ட மற்ற அதிகாரிகள், 'அது எப்படி சாத்தியம்?' என கேட்டனர்.
ஆனால் ஒரு விஷயத்தை அந்த ஐ.பி.எஸ்., அதிகாரி மறைத்துவிட்டார். அதிகாரி சொன்னதை கேட்டு கோபமடைந்த அமித் ஷா, 'உங்களுக்கு தமிழக அரசியல் தெரியவே இல்லை. தி.மு.க.,வை எதிர்த்து உருவாக்கப்பட்டது தான், அ.தி.மு.க., அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான்கு ஆண்டுகள் பழனிசாமி முதல்வராக இருக்க, மோடி தான் உதவி செய்தார். தி.மு.க.,வை தோற்கடிப்பது தான், அவர் உட்பட எங்களது குறிக்கோள்' என, அந்த ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் சொன்னாராம்.
'விஜயின் கட்சிக்கு எத்தனை சதவீத ஓட்டுகள் கிடைக்கும்; அவரால் தனியாக ஆட்சி அமைக்க முடியுமா? விஜயால் தி.மு.க,.விற்கு சாதகமா பாதகமா' என, பல விஷயங்களை இந்த விருந்தில் அதிகாரிகள் பேசிக் கொண்டனராம். மத்திய அரசின் மிக மூத்த அதிகாரி தமிழக அதிகாரிகளின் பேச்சை கேட்டு விட்டு, 'இந்த முறை தமிழகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது; பொறுத்திருந்து பாருங்கள்' என்றாராம்.

