தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இண்டிகோவுக்கு ஒரு நியாயம்; பயணியருக்கு ஒரு நியாயமா?

இண்டிகோவுக்கு ஒரு நியாயம்; பயணியருக்கு ஒரு நியாயமா?

இண்டிகோவுக்கு ஒரு நியாயம்; பயணியருக்கு ஒரு நியாயமா?


ADDED : நவ 16, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் நடக்காதது இந்தியாவில் நடந்து விட்டது


இந்தியா வந்த அமெரிக்க சுற்றுலா பயணி பிரிட்டனி, டில்லி விமான நிலையத்தில் தன், 'ஏர்பாட்'களை தவற விட்டார். திரும்ப கிடைக்கும் என்று அவர் நினைக்கவே இல்லை. இந்தியரான அவரது கணவரும், 'போனது போனது தான்' என்று கூறி விட்டார். ஆனால், நான்கு நாட்கள் கழித்து 'ஏர்பாட்'களை விமான நிலைய ஊழியர்கள் கண்டுபிடித்து ஒப்படைத்தனர். ஆச்சர்யம் அடைந்த பிரிட்டனி வெளியிட்ட பதிவு, வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

Image 1645841

'அமெரிக்க விமான நிலையங்களில் தொலைந்து போன லேப்டாப், கிண்டில், வாலட் என, எந்த ஒரு பொருளையும் என்னால் மீட்க முடிந்ததில்லை. இந்தியாவில் தவறவிட்ட 'ஏர்பாட்' கிடைத்து விட்டது. டில்லி விமான நிலைய பணியாளர்களுக்கு நன்றி' என்று கூறியுள்ளார் பிரிட்டனி.

இசை ரசிகர்களுக்கு இப்படியும் ஒரு எச்சரிக்கை


அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான, 'கன்ஸ் அண்ட் ரோஸஸ்' அசாம் மாநிலம் குவஹாத்தியில் வரும், 17ல் நிகழ்ச்சி நடத்துகின்றனர். 50 ஆயிரம் பேர் வரக்கூடும் என்று யோசித்த போலீசார், சாலை பாதுகாப்பு உத்தியை கையில் எடுத்தனர். பிரபல பாப் பாடல் வரிகளுடன் அவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை பதிவுகள் வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. 'எவருடைய இரவும் சொர்க்கத்தின் கதவை தட்டுவதில் சென்று முடியக்கூடாது' என்கிறது ஒரு பதிவு.

Image 1645842

நிகழ்ச்சிக்கு எப்படி வர வேண்டும் என்றும் போலீசார் நுாதனமாக குறிப்பிட்டிருந்தனர். ஏவியேட்டர் சன்கிளாஸ், லெதர் அண்ட் டெனிம், போல்டட் ஹெட் பந்தனாஸ், பேண்ட் டீஸ், ஹெல்மெட், சீட்பெல்ட், ஸ்பீடு லிமிட், மது மயக்கத்தில் வாகனம் ஓட்டக்கூடாது, பாதுகாப்பாக வீடு திரும்புதல் என, செக்லிஸ்ட் வைத்துக்கொள்ளும்படி, பாடகர் ரோஸ் பெயரிலான போலீஸ் அறிக்கையும் வேகமாக பரவி வருகிறது.

இண்டிகோவுக்கு ஒரு நியாயம்; பயணியருக்கு ஒரு நியாயமா?


டில்லியில் இருந்து ராஜ்கோட் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் காலை, 5:30 மணிக்கு புறப்பட வேண்டும். குழந்தையுடன் வந்த தம்பதி, 5.:06 மணிக்கு விமான நிலையம் வந்து விட்டனர். ஒரு நிமிட தாமதம் என்று கூறி, விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயணி, '5:30க்கு புறப்பட வேண்டிய விமானம், 13 நிமிடம் முன்னதாக, 5:17 மணிக்கு புறப்பட்டது. அடுத்த விமானம், 11:00 மணிக்கு புறப்பட வேண்டும். 10:53 மணி வரை பயணிகள் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

எந்த பொறுப்பும் இல்லாமல் உங்கள் இஷ்டத்துக்கு நேரத்தை மாற்றி வைத்துக் கொள்கிறீர்கள்? நேரம் தவறாமை என்பது, பயணிகளுக்கு மட்டும் தானா, பயணிகளுக்கு ஒரு விதியும், தனக்கு ஒரு விதியும் இண்டிகோ பின்பற்றுகிறதா' என்று கேள்விகளை எழுப்பினார். வலைதளவாசிகள், இண்டிகோவை சரமாரியாக விமர்சிக்கின்றனர்.

49 ஆண்டாக இருக்கும் பேட்; சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி


Image 1645843

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தான் குழந்தையாக இருந்த போது பேட் பிடித்திருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதே பேட் பிடித்தபடி இப்போது எடுத்த படத்தையும் அவர் வெளியிட்டார். '49 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த பேட்டுக்கு என் வாழ்க்கையில் சிறப்பிடம் உண்டு; அது என் குழந்தை பருவத்தின் நினைவுகளை தாங்கியிருக்கிறது' என்கிறார் சச்சின். பதிவை பார்த்த வலைதள பிரியர்கள், கிரிக்கெட் மீதான அவரது காதலை கொண்டாடுகின்றனர்.

சுத்தமாக இருந்த சாலைகள்; சுற்றுலா பயணிக்கு ஆச்சர்யம்


இந்திய சுற்றுலா பயணி அக்சத் ஸ்ரீவஸ்தவா தாய்லாந்து சென்றிருந்தார். சியாங் மாய் என்ற சிறு நகரத்துக்கு சென்றவர், நகர சாலைகளின் துாய்மை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், 'பாதசாரிகள் சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள், வேகத்தை குறைத்து நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Image 1645844

'இடைவிடாத ஹார்ன் ஒலியும் கேட்கவில்லை. டெஸ்லா கார் ஒன்று, அபாய எச்சரிக்கை விளக்குகள் ஒளிர்ந்தபடி, பாதசாரி கடப்பதற்காக காத்திருந்தது' என்கிறார், ஸ்ரீவஸ்தவா. 'துாய்மை, போக்குவரத்து பராமரிப்பு போன்ற விஷயங்களில், தாய்லாந்து நகரங்களை பார்த்து இந்திய நகரங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற அவரது பதிவு, வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us