அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் ஓரிரு நாளில் புதிய கட்சி இணையும்: பழனிசாமி
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் ஓரிரு நாளில் புதிய கட்சி இணையும்: பழனிசாமி
UPDATED : ஜன 13, 2026 05:45 AM
ADDED : ஜன 13, 2026 05:17 AM

சென்னை: 'புதிய கட்சி ஒன்று அ.தி.மு.க., கூட்டணியில் ஓரிரு நாளில் இணையும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கடந்த 9ம் தேதி முதல் நேர்காணல் நடத்தி வருகிறார்.
விருப்ப மனு
சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில், நேற்று நடந்த நேர்காணலில் விருதுநகர், கடலுார், நாகை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
நேர்காணலின்போது, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி, பொருளாளர் சீனிவாசன், தலைமை நிலையச் செயலர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விருப்ப மனு அளித்தவர்களை, தொகுதி வாரியாக மொத்தமாக அழைத்து, அந்தந்த மாவட்டச் செயலர் முன்னிலையில் பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.
அப்போது, 'தொகுதிக்கு ஒருவரைதான் வேட்பாளராக நிறுத்த முடியும். தகுதியான, வெற்றி வாய்ப்புள்ளவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
'யார் அறிவிக்கப்பட்டாலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கினாலும், வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என பழனிசாமி கூறி உள்ளார்.
அப்போது, மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், 'தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்' என தெரிவித்தனர்.
வலுவான கூட்டணி
அதற்கு பதிலளித்த பழனிசாமி, 'தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, வலுவான கூட்டணியை அமைக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
'கூட்டணியில் பா.ம.க., இணைந்துள்ளது. ஓரிரு நாளில், ஒரு புதிய கட்சி நம் கூட்டணியில் இணையும். மேலும் சில கட்சிகளுடனும் பேசி வருகிறோம்.
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது. எனவே, நம்பிக்கையுடன் இருங்கள். மூன்று மாதங்களில் அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்' என கூறியுள்ளார்.
வரும் 23ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி, பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள், கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க பழனிசாமி முயற்சி செய்து வருவதாக அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

