'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் பயனாளிகளை சேர்க்க புது 'ரூட்'
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் பயனாளிகளை சேர்க்க புது 'ரூட்'
ADDED : ஆக 04, 2025 03:35 AM

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்கு, அரசு தரப்பில் புதிய வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15ம் தேதி துவக்கி வைத்தார்.
நகர்ப்புறங்களில், 13 அரசு துறைகளின் 43 சேவைகள், ஊரகப்பகுதிகளில், 15 அரசு துறைகளின் 46 சேவைகள் முகாம்களில் வழங்கப்படுகின்றன.
இங்கு பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும், புதிய பயனாளிகள் சேர்க்கப்படுகின்றனர்.
இதனால், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதுவரை, 15 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
இத்திட்டம் குறித்து, பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று, தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு ஒரு படிவம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில், வரிசை எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர்கள், ரேஷன் அட்டை எண், மனுதாரர் பெயர், முகவரி, தொலைபேசி எண், பாலினம் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
முகாம்களில் வழங்கப்படும் சேவை பட்டியலில் இருந்து, கோரிக்கைகளை குறிப்பிட வேண்டும். சேவை பட்டியலில் இல்லாத கோரிக்கைகளையும் சுருக்கமாக தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஒரு மனுவில் மூன்று கோரிக்கைகள் வரை குறிப்பிட முடியும். வாய்ப்பிருந்தால் மூன்று கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். முடியாத நிலையில், ஏதேனும் ஒரு கோரிக்கையை பூர்த்தி செய்து, பயனாளிகளை சேர்க்க வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, சட்டசபை தேர்தல் நேரத்தில், வாக்காளர்களை கவர முடியும் என, அரசு தரப்பில் ஆணித்தரமாக நம்பப்படுகிறது.