சென்னை - குமரி வரை ஆழ்கடலில் தேங்கிய பாலிதீன் கழிவுகளை அகற்றிய ஸ்கூபா டைவர்
சென்னை - குமரி வரை ஆழ்கடலில் தேங்கிய பாலிதீன் கழிவுகளை அகற்றிய ஸ்கூபா டைவர்
UPDATED : அக் 12, 2024 05:28 AM
ADDED : அக் 12, 2024 01:13 AM

ராமநாதபுரம்:சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலுக்கு அடியில் தேங்கிய 40 ஆயிரம் கிலோ பாலிதீன் கழிவுகளை சென்னையைச் சேர்ந்த ஸ்கூபா டைவிங் வீரர் அரவிந்த் தருண் ஸ்ரீ 35, அகற்றியுள்ளார். வனம், தீயணைப்புத்துறை வீரர்களுக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியும் இவர் அளித்து வருகிறார்.
ஸ்கூபா டைவர் மற்றும் பயிற்சியாளரான அரவிந்த் தருண் ஸ்ரீ வாரத்தில் 3 நாட்கள் கடலில் ஸ்கூபா டைவிங் செய்து காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை பயிற்சியில் ஈடுபடுகிறார். பலருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியும் அளிக்கிறார். பயிற்சியின் போது ஆழ்கடலுக்குள் செல்லும் இவர் அங்கு தேங்கியிருக்கும் பாலிதீன் பைகள், வாட்டர் பாட்டில்கள், அறுந்து போன வலைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கரைக்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தியும் வருகிறார்.
தன்னிடம் பயிற்சி பெற வரும் அனைத்து ஸ்கூபா டைவர்களையும் ஒருங்கிணைத்து கடல் வளத்தை அழிக்கும் பாலிதீன் குப்பையை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை கடலுக்கு அடியில் இருந்து 40 ஆயிரம் கிலோ பாலிதீன் பைகள், வாட்டர் பாட்டில்களை இவர் அப்புறப்படுத்தியுள்ளார்.
வனம், தீயணைப்புத்துறையினர், கடலோர காவல் படையினருக்கு ஆழ்கடலுக்குள் செல்வது குறித்தும் இவர் பயிற்சியளித்து வருகிறார். இதுவரை ஸ்கூபா டைவிங்கில் 30 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளார். கடலுக்குள் வீசப்படும் கடத்தல் தங்கம், கடலில் மூழ்கிய படகுகளை மீட்பது போன்ற பணிகளிலும் இவர் ஈடுபடுகிறார். இதுவரை கடலில் மூழ்கிய 60க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளை மீட்டுள்ளார்.
அரவிந்த் தருண் ஸ்ரீ கூறியதாவது: கடலுக்குள் வீசப்படும் பாலிதீன் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதால் முழுமையாக அவற்றை அகற்ற முயற்சித்து வருகிறேன். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆழ்கடல் பகுதியில் அச்சமின்றி செல்வதற்கு பிற அரசு துறையினர், தனிநபர்களுக்கு பயிற்சியளித்தும் வருகிறேன். துாத்துக்குடி அருகே மணப்பாடு பகுதியில் கடலில் மூழ்கிய 7 டன் படகை 2 நாட்கள் போராடி மீட்க உதவியாக இருந்தேன் என்றார்.