UPDATED : ஜன 28, 2024 12:13 PM
ADDED : ஜன 28, 2024 01:21 AM

சென்னை: தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடமில்லை என்பதை, முதல்வர் ஸ்டாலின் சூசகமாக சொல்லிவிட்ட நிலையில், அ.தி.மு.க.,வுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறக்க முடியாத சூழலில் உள்ள பா.ம.க., பழையபடி பா.ஜ., பக்கம் திரும்ப தயாராகி வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி தவிர, 2019 லோக்சபா தேர்தலில் உருவான கூட்டணியை, தி.மு.க., அப்படியே தக்க வைத்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலுக்கு, கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லாததாலும், பா.ம.க.,வை வி.சி., எதிர்ப்பதாலும், கூட்டணியில் புதிதாக எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத தி.மு.க., தலைமை, புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.
கூட்டணியில் சேர விரும்பிய பா.ம.க., மக்கள் நீதி மையம், தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு இடமில்லை என்பது, திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாட்டுக்கு பின் தெளிவாகி விட்டது.
விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இருப்பது தேர்தல் உறவு அல்ல; அரசியல் உறவு அல்ல; கொள்கை உறவு. ஈ.வெ.ரா.,வையும், அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா? அதுபோலத்தான் தி.மு.க.,வும், வி.சி.,யும்' என்றார்.
'பா.ஜ.,வும், பா.ம.க.,வும் இருக்கும் இடத்தில் ஒரு போதும் இருக்க மாட்டோம்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசி வரும் நிலையில், பா.ம.க.,வுக்கு இடமில்லை என்பதையே, முதல்வர் ஸ்டாலின் தன் பேச்சின் வாயிலாக சுட்டிக்காட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்காக, அ.தி.மு.க., பக்கம் போகவும் பா.ம.க.,வுக்கு தயக்கம். அதற்கு காரணம், 2019 லோக்சபா மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்.
எனவே, தேர்தல்தோறும் அணி மாறும் போக்கு ராமதாசிடம் தென்பட்டாலும், அதற்கான சூழலுக்கு அவர் தள்ளப்படுகிறார் என்றே அவரது கட்சியினர் சொல்கின்றனர்.
இப்போதும் காட்சி மாறத்தான் போகிறது. 'கடந்த லோக்சபா, சட்ட சபை தேர்தல்களில், தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க.,வுடன் சேர்ந்து வேலை செய்தோம்; தோற்றுப் போனோம்' என்று கூறும் பா.ம.க.,வினர், பிரதமர் மோடி அழைப்பை, ராமதாஸ் எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
'திருமாவளவனுடன் தி.மு.க., தலைவர் நெருக்கம் காட்டும் போது, நாம் எப்படி அங்கிருக்க முடியும்? அ.தி.மு.க.,வால் ஏற்பட்ட கசப்பு இன்னும் நீங்கவில்லை; அக்கட்சியும் முந்தைய பலத்தில் இல்லை.
'பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், தர்மபுரி தொகுதி கிடைப்பதோடு, அதில் எளிதாக வெற்றி பெறலாம்.
'சிறிய கட்சிகளை அரவணைத்து, மோடியின் புகழ் வெளிச்சத்தில் தேர்தல் போட்டியில் ஜெயித்து விடலாம் என, தமிழக பா.ஜ., நம்புவதிலும் அர்த்தம் இருக்கிறது' என, காரணங்களை அடுக்கும் பா.ம.க.,வினர், 'எங்க தலைவரோட மனைவி சொன்னதை கவனித்தீர்களா? அயோத்தி சென்று, பால ராமரை பார்க்கப் போறாங்க... சிக்னலை புரிஞ்சுக்கோங்க' என்கின்றனர்.

