விபத்தா... சதியா: புது அர்த்தம் சொல்லும் திருமாவளவன்
விபத்தா... சதியா: புது அர்த்தம் சொல்லும் திருமாவளவன்
ADDED : அக் 11, 2025 05:45 AM

சென்னை : 'திருமாவளவன் காரை நிறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்' என, வி.சி., சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வி.சி., துணை பொதுச்செயலர் ரஜினி காந்த் அளித்துள்ள புகார்:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கறிஞர் ராக்கேஷ் கிஷோர் நடத்திய, அவமதிப்பு தாக்குதலை கண்டித்து, வி.சி., வழக்கறிஞர் அணியின் சார்பில், அக்.,7 ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவர் மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டபோது, அவரது வாகனத்தை வழக்கறிஞர் ராஜிவ்காந்தி என்பவர், தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கண்காணித்தார்.
அதன் பின், எங்கள் கட்சி தலைவர் வாகனத்தை மறிப்பது போல், இரு சக்கர வாகனத்தில் சென்றார். அங்குள்ள வேகத்தடையில், திருமாவளவன் காரை வழி மறித்தார். பின்னர் எங்கள் கட்சி தலைவரை நோக்கி வந்து ஆபாசமாக திட்டினார். அவரை போலீசார் தடுக்க முயன்றனர். அதையும் மீறி, எங்கள் தலைவரை நோக்கி தாக்குதல் நடத்த பாய்ந்து வந்தார்.
அவரை போலீசாருடன் சேர்ந்து, எங்கள் கட்சியினர் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, முறைப்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். திருமாவளவனை தாக்க முயன்ற வழக்கறிஞர் ராஜிவ்காந்தி குற்றப்பின்னணி கொண்டவர். அவருக்கு ஆதரவாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆகவே, இச்சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பது உறுதியாகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை கைது செய்ய வேண்டும். அண்ணாமலையை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றம் அருகே, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன், அக்., 7ம் தேதி அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு, 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ்., --- பா.ஜ., வினர் பின்னணியில் உள்ளனர் என்பது, எமது விசாரணையில் தெரிய வருகிறது.
எனவே, தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரிக்க வேண்டும். பின்னணியில் உள்ள சதியினை கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளை சார்ந்தவர்களையும், முழுமையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.