ADDED : நவ 11, 2024 04:22 AM

சென்னை: 'ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், தனக்கு பதிலாக வேறு நபரை நியமித்து முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் மீது அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கலாம்' என, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் அனுமதி அளித்துஉள்ளார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டம், ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி, தனக்கு பதில் வேறொருவரை பணியமர்த்தி விட்டு, வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்து உள்ளார்.
இதை, அப்பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து கடந்த வாரம், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது, தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகின்றனரா என, மாநிலம் முழுதும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், ஆசிரியர்கள் யாரேனும் ஆள்மாறாட்டம் செய்தது ஆய்வின் போது கண்டறிந்தால், அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளே, உரிய நடவடிக்கை எடுக்கலாம் என, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.