அனுமதியின்றி கட்டடம் கட்டினால் கூடுதல் கட்டணம்: நகராட்சி, மாநகராட்சிகள் அதிரடி
அனுமதியின்றி கட்டடம் கட்டினால் கூடுதல் கட்டணம்: நகராட்சி, மாநகராட்சிகள் அதிரடி
UPDATED : ஜன 15, 2024 02:45 AM
ADDED : ஜன 15, 2024 02:03 AM

சென்னை: முறையாக அனுமதி பெறாமல், அதே நேரம் விதிகளுக்கு உட்பட்டு கட்டடங்கள் கட்டினால், கூடுதல் கட்டணம் வசூலிக்க நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அரசு உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளுக்கு உட்பட்டு தான், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஆகியவை, புதிய கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வழங்கும்.
உரிமம்
இதில் குறிப்பிட்ட அளவுக்கான கட்டடங்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கும். டி.டி.சி.பி., - சி.எம்.டி.ஏ., அமைப்புகள் திட்ட அனுமதி வழங்கும் இடங்களிலும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளே உரிமம் வழங்கும்.
இந்நிலையில், உரிய முறையில் வரைபடம் தயாரித்து திட்ட அனுமதி பெறாமல் யாரும் கட்டடங்கள் கட்டக்கூடாது. அப்படி யாராவது கட்டடங்கள் கட்டினால், அந்த கட்டடங்கள் சீல் வைக்கப்படும், தேவை அடிப்படையில் இடிக்கவும், உள்ளாட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதில் திட்ட அனுமதி பெறாத கட்டடங்கள் என்ற ஒரே அளவுகோலை அப்படியே கடைப்பிடிக்காமல், அந்த கட்டடம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்றும் அதிகாரிகள் பார்க்க வேண்டும்.
திட்ட அனுமதி பெறவில்லை என்றாலும், விதிகளுக்கு உட்பட்டு அந்த கட்டடம் இருந்தால், அதை சீல் வைக்காமல் வரன்முறைப்படுத்த வழிவகை உள்ளது.
அனுமதி
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், அனுமதியின்றி அதே நேரம் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படும் கட்டடங்களுக்கான கூடுதல் கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
குடியிருப்பு கட்டடங்களை பொறுத்தவரை கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில் 25 சதவீதம், தரைதள நிலையில் 50 சதவீதம், தரைதள மேற்கூரை நிலையில் 100 சதவீதம், ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும் 50 சதவீதம் என்ற விகிதத்தில் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம்.
குடியிருப்பு அல்லாத இதர பயன்பாட்டுக்கான கட்டடங்களை பொறுத்தவரை, பணிகள் துவங்கிய நிலையில் 50 சதவீதம், தரைமட்ட நிலையில், 75 சதவீதம், தரைதள மேற்கூரை நிலையில் 150 சதவீதம், ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும் 50 சதவீதம் என்ற விகிதத்தில் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம்.
நகராட்சி, மாநகராட்சிகளில் புதிய கட்டட அனுமதிக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அடிப்படையில் இந்த கூடுதல் கட்டணங்களை நிர்ணயித்து வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான உரிய அறிவிப்புகளை மாநகராட்சிகள், நகராட்சிகள் வெளியிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.