சுங்க சோதனையை எளிதாக்கும் 'அதிதி'; ஆர்வம் காட்டும் சர்வதேச பயணியர்
சுங்க சோதனையை எளிதாக்கும் 'அதிதி'; ஆர்வம் காட்டும் சர்வதேச பயணியர்
ADDED : டிச 20, 2024 06:08 AM

வெளிநாடு சென்று திரும்புவோருக்கும், பிற நாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கும், குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகள் கட்டாயம். வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வந்தால், அதற்கான சுங்க வரி செலுத்த, 'ரெட் சேனல்' வழியாக செல்ல வேண்டும்.
எதுவும் எடுத்து வரவில்லை என்றால், 'கிரீன் சேனல்' வழியாக செல்லலாம். மேலும், 'ட்யூட்டி ப்ரீ' எனப்படும், வரி இல்லாமல் பொருட்கள் வாங்கும் கடைகளில், குறிப்பிட்ட அளவிலான பொருட்களை வாங்கலாம். பலருக்கு இது குறித்த விபரம் தெரிவதில்லை. இந்நிலையை மாற்றவும், வரி செலுத்த வசதியாகவும், மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், 'அதிதி' என்ற செயலியை, 2019ல் அறிமுகப்படுத்தியது.
இதனால், சுங்க வரி செலுத்தும் பொருட்களை வைத்திருப்போர், முன்கூட்டியே செயலியில் தகவல் தெரிவித்து, எளிதில் வரி செலுத்தி செல்லலாம். சென்னை, டில்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணியர், கடந்த சில மாதங்களாக இந்த செயலியை அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் பலருக்கு, சுங்க வரி செலுத்த வேண்டிய பொருட்கள் பற்றி தெரிவதில்லை. 'எங்களுக்கு தெரியாது; அதனால் எடுத்து வந்து விட்டோம்' என்று சொல்வது வழக்கம்.
சில நேரங்களில், 'ட்யூட்டி ப்ரீ' பொருட்களை கூட, வெளிநாடுகளில் இருந்து நிர்ணயித்த அளவுக்கு மேல் கொண்டு வருவர். இதற்கான வழிமுறைகள் பற்றி, இணையதளத்திலும், சமூக வலைதளத்திலும் தெரிவித்து வருகிறோம். 'அதிதி' செயலி வாயிலாக, சுங்க வரி செலுத்தும் பொருட்களின் விபரங்ளை முன்கூட்டியே பதிவிட்டால், சோதனையின் போது பிரச்னை எதுவும் இருக்காது. அனுமதிக்கப்பட்ட பொருட்களின் அளவு விபரங்கள், இதில் உள்ளதால் தெளிவு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -