ADDED : ஆக 28, 2024 05:01 AM

சில தினங்களுக்கு முன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, சில கருத்துகளை தெரிவிக்க, பதிலுக்கு அண்ணாமலை அவரை கடுமையான சொற்களால் சாடினார்.அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.
அண்ணாமலையை கண்டித்து, மதுரை, சிவகங்கை உட்பட சில இடங்களில், அவரது உருவ பொம்மையை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர். இரு கட்சி தலைமைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல், நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இது நேற்று, இரு கட்சி தலைவர்கள் பேட்டி மற்றும் அறிக்கையில் வெளிப்பட்டது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:
அ.தி.மு.க., குறித்து பேச, அண்ணாமலைக்கு தகுதி கிடையாது. அ.தி.மு.க.,வை ஒழிக்க, விட்டில் பூச்சியான அண்ணாமலையால் முடியாது. அ.தி.மு.க.,வை தொட்டவர்கள் கெட்டுப் போவர் என்பது வரலாறு.
அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளார். முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ளார். இருவரும் என்ன பேசப் போகின்றனர் எனத் தெரியவில்லை. அண்ணாமலை ஒரு கம்பெனி மேலாளர். பழனிசாமி பெரிய கட்சியின் பொதுச் செயலர். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி பகல் கனவு. அடுத்த தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ., கூட வெற்றி பெற முடியாது.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு.நாகராஜன்:
அ.தி.மு.க., நான்காக சிதறியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாமல், தொண்டர்கள் பரிதவித்து வருகின்றனர். பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக, மக்கள் ஏற்கவில்லை. அ.தி.மு.க.,வினர் மீதான ஊழல் வழக்குகளை, ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்தில் அடுக்குவோம்.
பழனிசாமி மீதுள்ள வழக்குகளை விரைவுபடுத்த, நீதிமன்றங்களை நாடுவோம்.உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை, நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம். ஜெயலலிதாவின் லட்சியங்களை செயல்படுத்தும் இயக்கம் பா.ஜ.,தான் என்று, அ.தி.மு.க., தொண்டர்கள் நினைக்கத் துவங்கி விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.