முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வழங்கல்: ஸ்டாலின் கணினி குரல் அழைப்பால் அதிருப்தி
முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வழங்கல்: ஸ்டாலின் கணினி குரல் அழைப்பால் அதிருப்தி
ADDED : ஜன 15, 2025 08:45 AM

முன்கூட்டியே வழங்கப்பட்ட உரிமைத்தொகை குறித்து, ஸ்டாலின் பேசும் கணினி குரல் அழைப்பு வந்ததால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்ட போதும், பணம் எதுவும் வழங்கப்படவில்லை. குடும்பத்தினர் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
இதையறிந்து, மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு, நேற்று முன்தினம் மாலை முதல், வங்கியில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று, பயனாளிகளின் மொபைல் போன்களுக்கு, கணினி குரல் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
அதில், ஸ்டாலின் குரலில் பேசி இருப்பதாவது:
நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்... பொங்கலை முன்னிட்டு, மகளிர் உரிமை தொகை, 1,000 ரூபாய், வழக்கமாக வழங்கப்படும், 15ம் தேதிக்கு பதில், முன்கூட்டியே அனுப்பியுள்ளோம். தாய்வீட்டு சீர் மாதிரி, உங்க ஸ்டாலின், மாதந்தோறும் தரும் உரிமைத்தொகை தொடங்கியது முதல், இதுவரை, 17,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, மன நிறைவையும் தந்திருக்கிறது.
உறுதியாக சொல்கிறேன்... சிறப்பான இத்திட்டம் எப்போதும் தொடரும். உங்கள் குடும்பத்துடன் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட அன்பு வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
- நமது நிருபர் -