தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ 'அட்வான்ஸ் ஒர்க்' செய்த 'படைப்பகம்' டெண்டர் ரத்து; 'தினமலர்' செய்தி எதிரொலி

 'அட்வான்ஸ் ஒர்க்' செய்த 'படைப்பகம்' டெண்டர் ரத்து; 'தினமலர்' செய்தி எதிரொலி

 'அட்வான்ஸ் ஒர்க்' செய்த 'படைப்பகம்' டெண்டர் ரத்து; 'தினமலர்' செய்தி எதிரொலி

3


ADDED : ஜூன் 24, 2026 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 07:49 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில், தி.மு.க.,ஆட்சியில் டெண்டர் கோராமல் விதிமுறையை மீறி, கோவையில் ரூ.1.35 கோடிக்கு முதல்வர் படைப்பகத்தில் வேலை செய்யப்பட்டிருந்தது. நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, அந்த வேலைக்கு சமீபத்தில் மாநகராட்சி கோரியிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

தி.மு.க., ஆட்சியில் கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி செலவில் ரூ.3.36 கோடியில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டது. அன்றைய முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் திறந்து வைத்தார்.

அவ்வளாகத்தில் 2வது தளத்தில் மேற்கூரை மற்றும் அபிவிருத்தி பணிகள் ரூ.85 லட்சம் மற்றும் ரூ.55 லட்சம் என இரு வேலையாக பிரித்து, டெண்டரே இல்லாமல் செய்யப்பட்டன. இது விதி மீறல். டெண்டர் கோராமல் எந்த ஒப்பந்ததாரருக்கும் வேலை ஒதுக்க முடியாது. அதனால், மாநகராட்சியில் இருந்து பணம் கொடுக்கவில்லை.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க., அரசு செயல்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதல்வர் வசம் இருக்கிறது.

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறார். தற்காலிகமாக டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்டன. சட்டசபை தேர்தல் சமயத்தில் கோரியிருந்த டெண்டர்களுக்கு 'ஒர்க் ஆர்டர்' வழங்கக் கூடாதென அறிவுறுத்தப்பட்டது. புதிதாக டெண்டர் கோரும்போது வெளிப்படை தன்மையோடு இருக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் அனைத்து மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

கோவை மாநகராட்சியில் ரூ.26.50 கோடி மதிப்புக்கு 40 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டன. ஏராளமான ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டு மதிப்பீட்டை குறைத்து ஒப்பந்தம் கோரினர்.

இதில், பல பணிகள் விதிமுறையை மீறி, சட்ட விரோதமாக டெண்டர் இல்லாமல் 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில் செய்யப்பட்டு வருகின்றன. இதில், முதல்வர் படைப்பகத்தில் ரூ.1.35 கோடிக்கு டெண்டர் இல்லாமல் செய்த வேலைக்கும் டெண்டர் கோரப்பட்டிருந்தது. நமது நாளிதழில் ஜூன் 19ல் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையறிந்த மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, இப்பணிக்கான டெண்டரை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதேபோல், 22ம் தேதி கோரப்பட்ட பல்வேறு பணிகள் டெண்டர் கோராமலேயே செய்யப்பட்டு வருகின்றன. டெண்டர்களை நிறுத்தி வைத்து, 40 பணிகளையும் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். எதன் அடிப்படையில், எந்த ஒப்பந்ததாரர் டெண்டர் இல்லாமல் வேலை செய்கிறார் என்பதை கண்டறிந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறியியல் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமெனில், இதுபோன்ற தவறுகள் இனியும் தொடராத அளவுக்கு துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us