பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு: கோடை சாகுபடியை தவிர்க்க 'அட்வைஸ்'
பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு: கோடை சாகுபடியை தவிர்க்க 'அட்வைஸ்'
UPDATED : மார் 15, 2024 04:21 AM
ADDED : மார் 15, 2024 12:41 AM

சென்னை:பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், கோடை பருவ சாகுபடியை தவிர்க்கும்படி, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் சம்பா, தாளடி பருவ நெல் அறுவடை முடிந்து, கோடை பருவ சாகுபடி காலம் துவங்கியுள்ளது.
ஆயத்த பணி
இப்பருவத்தில் நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் மட்டுமின்றி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம்.
இதற்கான ஆயத்த பணிகளில், விவசாயிகள் இறங்கியுள்ளனர். பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பல்வேறு அணைகள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் நீராதாரமாக உள்ள ஏரிகள், குளங்களிலும் வறட்சி நிலவுகிறது.
அத்துடன், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் தலைதுாக்கி உள்ளது.
பரிந்துரை
நிலத்தடி நீரை தொடர்ந்து சாகுபடிக்கு உறிஞ்சினால், குடிநீர் தேவையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்படும். சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் பாதிக்கும்.
எனவே, ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, கோடை உழவு பணிகளை தவிர்க்க வேண்டும் என, விவசாயிகளை வேளாண் துறையில் அறிவுறுத்திஉள்ளனர்.
அதேநேரத்தில், ஏரிகள், குளங்களில் நீர் இருப்பு திருப்தியாக உள்ள இடங்களில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் சாகுபடி மேற்கொள்ளும்படி பரிந்துரையும் செய்து உள்ளனர்.

