UPDATED : மார் 17, 2024 05:37 AM
ADDED : மார் 17, 2024 12:03 AM

திருப்பூர்:வேட்புமனு தாக்கல் துவங்க, இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து, வேட்பாளரை அறிவிக்க போதிய அவகாசம் இல்லையென, அரசியல் கட்சிகள் திகிலடைந்துள்ளன.
லோக்சபா தேர்தல் களம், தமிழகத்தை திடீரென பரபரப்பாக மாற்றிவிட்டது. ஏழு கட்டமாக தேர்தல் அறிவித்தாலும், முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுவது, பலரையும் யோசிக்க வைத்துள்ளது. பிரதமர் மோடி, கடந்த ஒரு மாதமாக, எதற்காக தமிழகத்தையே சுற்றிக்கொண்டிருந்தார் என்ற விடுகதைக்கு, நேற்று விடை கிடைத்து விட்டது, தி.மு.க.,வினர் 'கமென்ட்' அடிக்கின்றனர்.
தேர்தலில், மூன்று முனை போட்டி உறுதியாகிவிட்டது. தி.மு.க., கூட்டணி, தமிழகத்தில் 'சீட்' பங்கீட்டை முடித்து, 'தொகுதி' பங்கீட்டு பணியை பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறது; கூட்டணி கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அ.தி.மு.க., கூட்டணிக்கு, எண்ணற்ற லெட்டர் பேடு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தும், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று மாலை வரை உறுதியாகவில்லை. 'சீட்' பங்கீடு, தொகுதி பங்கீடு விவகாரங்களை முடித்து, அதிருப்தியில்லாமல் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.
இதுவரை இல்லாத அளவுக்கு, அ.தி.மு.க.,வில், வேட்பாளராக பலரும் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். தேசிய அரசியல் வாசம் பிடிக்காமல், மாநிலத்திலேயே இருந்து விடுகிறோம் என்று கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.
பா.ஜ., கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது; தொகுதிகளை பங்கிட்டுகொள்ளும் பேச்சும் சென்று கொண்டிருக்கிறது. இத்தேர்தலில், புதிய பலத்துடன் பா.ஜ., களம் காணப்போகிறது.
தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிப்பதன் வாயிலாக, அ.தி.மு.க., வெற்றிக்கு சவாலாக மாறுமா என்ற அச்சமும் கட்சிகளில் பரவியுள்ளது. அதேநேரம், தி.மு.க.,வுக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டு, தங்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்றே அ.தி.மு.க. கணக்கு போட்டுள்ளது.
நேற்று... இன்று என காத்திருந்தபடி, தேர்தல் அறிவிப்பு வெற்றிகரமாக வெளியாகிவிட்டது.
இனிமேல் தான், அரசியல் கட்சிகளின் அதிவேக கூட்டணி பேச்சுவார்த்தையும், வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரமும், சுயேச்சை வேட்பாளர்களின் வேடிக்கை பிசாரமும் களைகட்டும்.

