அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்பிலேயே ஏ.ஐ., பாடம் அறிமுகம்
அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்பிலேயே ஏ.ஐ., பாடம் அறிமுகம்
ADDED : நவ 02, 2025 12:12 AM

மத்திய கல்வி அமைச்சகம், வரும் 2026 - 27 கல்வியாண்டு முதல், நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்பு முதல் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி பாடத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
கணினி மற்றும் 'மொபைல் போன்' சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற வேண்டும் என, மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது பற்றி விவாதிக்க, டில்லியில் அக்டோபர் 29ல் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கல்வி துறை செயலர் சஞ்சய் குமார் கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு கல்வி, அனைவருக்கும் அடிப்படை திறனாக கருத வேண்டும். ஒவ்வொரு மாணவரின் தனித்திறன் வெளிப் படுவதற்கும் பாடத்திட்டம் உதவியாக இருக்க வேண்டும்.
ஆசிரியருக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் கற்றல் - கற்பித்தல் வளங்கள், இந்த திட்டத்தின் முதுகெலும்பாக அமையும். இதற்காக, 1 கோடி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவால்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையில் சி.பி.எஸ்.இ., நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
இக்குழு, புதிய ஏ.ஐ., மற்றும் 'கம்ப்யூடேஷனல் திங்கிங்' எனப்படும் கணினி சிந்தனை குறித்த பாடத்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பில் உள்ளது.
த ற்போது, நாடு முழுதும் உள்ள, 18,000-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஏ.ஐ., பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும், 2019 முதல் ஐ.பி.எம்., மற்றும் தேசிய மின்னணு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 10,000 ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -:

