அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுக்களை குறிவைக்கும் நாம் தமிழர் கட்சி
அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுக்களை குறிவைக்கும் நாம் தமிழர் கட்சி
ADDED : ஜன 17, 2025 06:08 AM

அடுத்த மாதம் 5ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இத் தேர்தலில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., ஆகியவை போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் சந்திரகுமாரைத் தவிர, நாம் தமிழர் கட்சியில் இருந்து சீதாலட்சுமி போட்டியிடுகிறார். மற்றவர்கள் அனைவரும் சுயேச்சைகள்.
இதனால் சந்திரகுமாருக்கும், சீதாலட்சுமிக்கும் இடையே தான் போட்டியே. சந்திரகுமார், ஆளும்கட்சியை சேர்ந்தவர் என்பதால், எப்படியும் அவருக்குத்தான் வெற்றி என்ற சூழலே கள நிலவரமாக உள்ளது.
ஆனாலும், 'பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை முடிந்த அளவுக்கு பெற்று, கடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் பெற்ற ஓட்டுக்களை விட கூடுதலாக இம்முறை பெற்றுக் காட்ட வேண்டும்; அது, அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு கட்சிக்கு பேருதவியாக இருக்கும்' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி, கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் நிர்வாகிகளை உசுப்பி விட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில், தொகுதிக்குள் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு ஓட்டளிப்போர் குறித்த தகவல்களை முழு வேகத்தில் சேகரித்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று, பிரசாரம் துவங்கும் நாளில் இருந்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்போரை குறிவைத்தே, தேர்தல் பிரசாரம் செய்ய லோக்கல் நாம் தமிழர் கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்குச் செல்லும் சீமானும், இரு பிரதான கட்சிகளின் ஓட்டை குறிவைத்து பிரசாரம் செய்ய முடிவெடுத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
-நமது நிருபர்-