தி.மு.க., அரசு மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு; ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.,க்கள் அமளி
தி.மு.க., அரசு மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு; ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.,க்கள் அமளி
ADDED : டிச 04, 2025 05:20 AM

மணல் கொள்ளை, வேங்கைவயல் விவகாரம், சென்னை வெள்ளம் உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக வைத்து, ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - தி.மு.க., உறுப்பினர்களுக்கு இடையே கடும் அமளி ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் நேற்று, தண்ணீர் மாசுபடுவதை தடுக்கும் சட்ட மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தி.மு.க., - எம்.பி., வில்சன், ''தமிழகத்தில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நிலத்தடி நீரில் உள்ள புளோரைடு நச்சு வேதிப்பொருளால், பெரும் பாதிப்பு இருக்கிறது.
''இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த 2010ல், ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் மற்றும் புளோரைடு தணிப்பு திட்டம் துவங்கப்பட்டு, 2013ல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது,'' என்றார்.
வேங்கை வயல் இதையடுத்து, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: தமிழகத்தில், கோவையில் நொய்யல் ஆறு மிகவும் மாசுபட்டுள்ளது. காவிரியும் பாழ்பட்டு விட்டது. புளோரைடு பாதிப்பால் , தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு , காவிரி நீரை கொண்டு வர எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் போதுதான் முயற்சிகள் துவங்கப்பட்டன.
தி.மு.க., - எம்.பி., குறிப்பிடும் இந்த திட்டத்திற்கான மூலகாரணம் அ.தி.மு.க., தான். தமிழக ஆறுகளில் ம ணல் கொள்ளையடிக்கப்பட்டதே, தண்ணீர் மாசுபட்டதற்கு காரணம். ஆளுங்கட்சியினர் பணத்தை வாங்கிக் கொண்டு, மணலை அள்ளுவதற்கு வழிவிட்ட தமிழக அரசுதான், இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தலித் மக்கள் வசிக்கும் வேங்கை வயலில், குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அவலம் நடந்தது. ஆனால், அந்த மக்களையே குற்றவாளியாக சித்தரித்து விட்டனர். இதற்கு தி.மு.க., அரசுதான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, ஜீரோ நேரத்தின்போது, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை பேசுகையில், ''தமிழக விவசாயிகளுக்கு, மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது, புயலாலோ, மழை வெள்ளத்தாலோ அல்ல; தி.மு.க., அரசின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவால்தான்.
ரூ.4,000 கோடி
''ஆயிரக்கணக்கான ஏக்கரில், பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன. சென்னை நகரமே, 2 அடி உயர தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த நகரத்திற்கு, 4,000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எங்கு பார்த்தாலும், மழை தண்ணீராக உள்ளது,'' என்றார்.
தமிழக அரசை அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் விமர்சித்தபோது எல்லாம், தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமளியும் பரபரப்பும் ஏற்பட்டது.
- நமது டில்லி நிருபர் -

