ADDED : ஆக 09, 2025 04:04 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.,வின் 'மக்களை தேடி மக்கள் தலைவர்' என்ற கேப்டன் ரத யாத்திரை நடந்தது.
அப்போது அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டியில், 'ஜன., 9ல் கடலுாரில் தே.மு.தி.க., மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீரமணியின் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து சென்றார்' என்றார்.
வீரமணி சந்திப்பில் நடந்தவை குறித்து வெளிப்படையாக பிரேமலதா சொல்லாவிட்டாலும், சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசியதாகவே தே.மு.தி.க.,வினர் கூறுகின்றனர்.
தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., போட்டியிட்டது. விருதுநகரில் மட்டும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூடுதல் ஓட்டுகள் வாங்கினார்.
போட்டியிட்ட பல இடங்களிலும் டிபாசிட் தொகை பறிபோனது. இதனால், அ.தி.மு.க.,விடம் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்தார் பிரேமலதா.
'தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்டதை செயல்படுத்துங்கள்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் கேட்டுப் பார்த்தார்; நடக்கவில்லை. இதனால், அ.தி.மு.க., தலைமை மீது கடும் வருத்தத்தில் பிரேமலதா இருக்கிறார்.
சமீபத்தில், முதல்வர் ஸ்டாலினை இல்லம் தேடிச் சென்று சந்தித்தார்; உடல் நலம் விசாரித்தார். அப்போது, இரு தரப்பினரும் கூட்டணி குறித்தே பேசி உள்ளனர். தேர்தல் நெருக்கத்தில், அடுத்த கட்ட பேச்சை தொடருவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து, தே.மு.தி.க.,வை எப்படியும் அ.தி.மு.க., கூட்டணிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என பழனிசாமி விரும்புகிறார். முன்னாள் அமைச்சர் வீரமணியை அனுப்பி பிரேமலதாவை கூட்டணிக்கு அழைக்கச் சொல்லி இருக்கிறார்.
அதன்பின்னரே, வீரமணி, திருப்பத்துாரில் தங்கியிருந்த பிரேமலதாவை சந்தித்து பேசினார்.
அப்போது, 'அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும் என்றால், தே.மு.தி.க.,வுக்கு குறைந்தபட்சம் 30 தொகுதிகள் வேண்டும்; போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான செலவை அ.தி.மு.க.,வே ஏற்க வேண்டும். நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் பிரேமலதாவால் விதிக்கப்பட்டன.
'இதை பழனிசாமியிடம் தெரிவிக்கிறேன்; ஒப்புக் கொண்டால், அடுத்து பேசலாம்' என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார் வீரமணி. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.