சட்டசபையில் திருப்பரங்குன்றம் பிரச்னையை எழுப்பாத அ.தி.மு.க., - பா.ஜ.,
சட்டசபையில் திருப்பரங்குன்றம் பிரச்னையை எழுப்பாத அ.தி.மு.க., - பா.ஜ.,
UPDATED : பிப் 19, 2026 07:06 AM
ADDED : பிப் 19, 2026 05:31 AM

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், நாளை முடிய உள்ள நிலையில், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, திருப்பரங்குன்றம் தீபத் துாண் பிரச்னையை, அ.தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் யாரும் எழுப்பாதது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில், கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்த பிரச்னை தமிழகத்தையும் தாண்டி தேசிய அளவில் பேசு பொருளானது. பார்லிமென்டிலும் இப்பிரச்னை எழுந்தது.
தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை, தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரக் கோரி, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி கட்சிகள், லோக்சபா சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தன.
தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாததற்காக, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், உயர் நீதிமன்றத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். இது தி.மு.க., அரசின் தோல்வியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 16வது சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர், நேற்று முன்தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கலுடன் துவங்கியது. பட்ஜெட் மீதான விவாதம் நேற்று துவங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் இடையே, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு பிரச்னைகள் குறித்து, வாக்குவாதம் நடந்தது.
ஆனால், திருப்பரங்குன்றம் பிரச்னையை யாரும் எழுப்பவில்லை. பா.ஜ., சார்பில் நேற்று யாரும் பேசவில்லை. இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'கடந்த கவர்னர் உரை மீதான விவாதத்தின்போது, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் திருப்பரங்குன்றம் பிரச்னையை எழுப்பினர்.
அவை அனைத்தையும் சட்டசபை குறிப்பிலிருந்து, சபாநாயகர் நீக்கி விட்டார். ஆனாலும், இன்று திருப்பரங்குன்றம் பிரச்னையை பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் எழுப்புவர் என நம்புகிறோம்' என்றார்.

