அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து போராட திட்டம்; இ.பி.எஸ்., - நயினார் சந்திப்புக்கு பின் முடிவு
அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து போராட திட்டம்; இ.பி.எஸ்., - நயினார் சந்திப்புக்கு பின் முடிவு
ADDED : ஏப் 23, 2025 04:52 AM

சென்னை : சட்டசபை வளாகத்தில் உள்ள, எதிர்க்கட்சி தலைவர் அறையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமியை, அவரது அறையில் சந்தித்து பேசினார்.
அப்போது அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம், பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி ஆகியோர் உடனிருந்தனர். சில நிமிடங்களுக்குப் பின், உடனிருந்தவர்கள் வெளியேற, பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும், 20 நிமிடங்கள் தனியே ஆலோசனை நடத்தினர்.
அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி அறிவிப்புக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை கொண்டு வருவது, கூட்டணிக்கு எதிராக தி.மு.க.,, அதன் கூட்டணி கட்சிகள் பேசி வருவது உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து, இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டதில், இரு கட்சித் தொண்டர்களுக்குமே உடன்பாடில்லை' என்று பரவி வரும் தகவலை அடுத்து, இரு கட்சித் தலைவர்களும் இணைந்து, தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
கூடவே, இரு கட்சி சார்பில் மாநாடு, பொதுக்கூட்டங்கள் நடத்தி, அதில் இரு கட்சித் தலைவர்களையும் ஒருசேர பங்கேற்க வைப்பது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் அப்போது பேசி முடித்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.