அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு; உறுதி செய்ய வருகிறார் பியுஷ் கோயல்
அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு; உறுதி செய்ய வருகிறார் பியுஷ் கோயல்
ADDED : ஜன 20, 2026 05:01 AM

சென்னை: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அவரின் முன்னிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில், தே.மு.தி.க., - அ.ம.மு.க., மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்க்க, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது.
அதில், தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசி வருகிறார்; ஆனால், தினகரன், பன்னீர்செல்வத்தை சேர்க்க தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
இதற்கிடையே, பிரதமர் மோடி வரும் 23ல் செங்கல் பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைக்கிறார்.
அதற்கு முன்னதாக, கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை இறுதி செய்வதுடன், தொகுதி பங்கீடுகளை முடித்து விடுமாறு, அ.தி.மு.க.,வை பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பியுஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அவர் முன்னிலையில், முதல் கட்டமாக அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவையும் கோயல் சந்தித்து பேச உள்ளார். அவரை தொடர்ந்து, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.
எனவே, மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் மேடை ஏற உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இதற்கிடையில், டில்லி சென்ற தமிழக பா.ஜ., நிர்வாகிகள், பியுஷ் கோயலை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
