கைமாறியது அ.தி.மு.க., - ஐ.டி., அணி கன்ட்ரோலில் எடுத்தது வியூக நிறுவனம்
கைமாறியது அ.தி.மு.க., - ஐ.டி., அணி கன்ட்ரோலில் எடுத்தது வியூக நிறுவனம்
ADDED : ஜன 25, 2026 04:18 AM

செயலர் ராஜ்சத்யன் தலைமையிலான அ.தி.மு.க., - ஐ.டி., அணி சுணங்கி போனதால், அதன் கட்டுப்பாட்டை, வியூக நிறுவனத்திடம், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி ஒப்படைத்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ராஜ்சத்யன் தலைமையிலான அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியை, தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து, அதிக முக்கியத்துவம் கொடுத்தார் பழனிசாமி. அதன் நிர்வாகிகளுக்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவிகளையும் கொடுத்தார்.
ஆனால், பெரும்பாலான ஐ.டி., அணி நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பரிந்துரையில் வந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு துதிபாடும் ஆட்களாகவே மாறினர். அதேபோல, ஐ.டி., அணி மண்டல, மாநில நிர்வாகிகளை, தனக்கு துதிபாடும் ஆட்களாக மாற்றி விட்டார் செயலர் ராஜ்சத்யன்.
அதோடு, அந்த அணி தலைவரான கோவை சத்யனுக்கும், செயலரான ராஜ் சத்யனுக்கும் ஆகவில்லை. இதனால், தி.மு.க-., - த.வெ.க., - பா.ஜ-.,வுக்கு இணையாக, அ.தி.மு.க., - ஐ.டி., அணி செயல்பட முடியவில்லை. இதனால், 'டென்ஷன்' ஆன பழனிசாமி, ஐ.டி., அணியை மொத்தமாக, தான் நியமித்திருக்கும், 'பிரமான்யா' என்ற வியூக வகுப்பு நிறுவனம் கையில் ஒப்படைத்து விட்டார்.
அதன்படி, ஐ.டி., அணிக்கு பொறுப்பேற்ற வியூக நிறுவன ஆட்கள், மூன்று மாவட்டத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமித்து, வேலை செய்ய துவங்கி விட்டனர்.
ஆனாலும், ஐ.டி., அணி செயல்பாட்டில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சமூக வலைதளங்களில் பழனிசாமியின் பதிவை கூட, நிர்வாகிகள் பகிர்வதில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -:

