கூட்டணி கட்சிகளுக்கு 100 'சீட்': 134ல் அ.தி.மு.க., போட்டி
கூட்டணி கட்சிகளுக்கு 100 'சீட்': 134ல் அ.தி.மு.க., போட்டி
UPDATED : டிச 17, 2025 05:16 AM
ADDED : டிச 17, 2025 05:09 AM

பா.ஜ.,வுக்கு 65, பா.ம.க.,வுக்கு 30, இதர கட்சிகளுக்கு 5 என, மொத்தம் 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 39 தொகுதிகளில், தி.மு.க., தலைமையிலான 'இண்டி' கூட்டணி, 46.97 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க., தலைமையில் தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு, 23.05 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன.
பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி இணைந்த தே.ஜ., கூட்டணி, 18.28 சதவீத ஓட்டுகளை கைப்பற்றியது. இதில், 28 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 11 தொகுதிகளில் பா.ஜ.,வும் இரண்டாம் இடத்தை பிடித்தன.
இந்த, 39 லோக்சபா தொகுதிகளில் அடங்கிய, 234 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியை விட, 80 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி கட்சிகள் முன்னணி வகிக்கின்றன.
இந்த 80 தொகுதிகளில், 75ல் பா.ஜ., தற்போது போட்டியிட வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ., தலைமை வலியுறுத்தியுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில், பா.ஜ.,வுக்கு, 65 தொகுதிகளை ஒதுக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., ஆகிய கட்சிகளின் கூட்டணி உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க., 134 தொகுதிகளில் போட்டியிட்டு, மீதமுள்ள 100 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி கைப்பற்றிய, 18.28 சதவீத ஓட்டுகள் அடிப்படையில், 65 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்படும். கூட்டணியில் இணையும் பட்சத்தில், பா.ம.க.,வுக்கு, 30 வரை ஒதுக்கப்படலாம்.
த.மா.கா., உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு, 5 இடங்கள் என, 100 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு, அ.தி.மு.க., ஒதுக்க வாய்ப்பு உள்ளது.இதில், தே.மு.தி.க., இணையும் பட்சத்தில், அக்கட்சிக்கு, 18 தொகுதிகள் ஒதுக்க ஏதுவாக, பா.ஜ.,- பா.ம.க.,வுக்கான தொகுதிகள் குறைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

