தப்புமா அ.தி.மு.க., இரட்டை இலை; வரும் 30ல் நிலவரம் தெரியும்
தப்புமா அ.தி.மு.க., இரட்டை இலை; வரும் 30ல் நிலவரம் தெரியும்
ADDED : டிச 25, 2024 05:24 AM

'அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு, மீண்டும் வரும் 30ம் தேதி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்' என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகே இரட்டை இலை யாருக்கு என்பது தெரிய வரும்.
உத்தரவு
அ.தி.மு.க., விவகாரம் தொடர்பாக, உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என, சூரியமூர்த்தி என்பவர், தேர்தல் கமிஷனில் மனு அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழனிசாமி, பன்னீர்செல்வம் உட்பட, அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் கேட்டு, நான்கு வாரத்திற்குள், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, முடிவு எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
அதை ஏற்று, பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் ராஜலட்சுமி, ஆஜராகி விளக்கம் அளித்தனர். சூரியமூர்த்தியும் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
தேர்தல் கமிஷன் வரும் 30ம் தேதி மீண்டும் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் ஆஜராகி, தங்கள் விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதற்காக இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக விளக்க மனுவை தயாரித்து வருகின்றனர். அவர்கள் விளக்கத்திற்கு பிறகு, இரட்டை இலை தொடர்பாக, தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்.
இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி, புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர், நேற்று தேர்தல் கமிஷனில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
அதன்பின் கே.சி.பழனிசாமி அளித்த பேட்டி:
ஜெயலலிதா இறந்தபோது, அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து, பின் கட்சியில் இருந்து யாரெல்லாம் நீக்கப்பட்டனரோ, அவர்கள் மாற்றுக் கட்சியில் சேராமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் அனைவரையும் மீண்டும் அக்கட்சியில் சேர்க்க வேண்டும். அதன்பின் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலை நடத்தி, பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
விதிமுறை மாற்றம்
அதுவரை, தற்போது அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளேன். தற்போதைய சூழலில், அ.தி.மு.க., விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது தவறு என கூறினால், கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரை கூட பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -