UPDATED : டிச 05, 2025 05:41 AM
ADDED : டிச 05, 2025 05:35 AM

பா.ம.க., உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், மாம்பழச் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம், இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
பா. ம.க., வில் அப்பா ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால், வரும் சட்டசபை தேர்தலுக்கு இருவரும் இணைந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பா. ம. க., தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'இரு தரப்புக்கும் பிரச்னை நீடித்தால், பா.ம.க.,வின் மாம்பழச்சின்னத்தை முடக்கும் நிலை ஏற்படும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பா.ம.க.,வுக்கு 4 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. வடக்கு, மேற்கு மாவட்டங்களில், 50க்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளில், அக்கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் ஓட்டு வங்கி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ., - பா.ம.க., கூட்டணி, 75 தொகுதிகளில் வென்றது. இதில், 50 தொகுதிகள் வடக்கு, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவை. பா.ம.க., உட்கட்சி குழப்பங்களால், அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்கனவே மனச் சோர்வில் உள்ளனர்.
பா.ம.க., பெயர், சின்னத்தை இரு தரப்பும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால், அக்கட்சியின் ஓட்டு வங்கி பெருமளவில் சரியும். இதனால், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்ற அச்சம், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தன்னை சந்தித்த அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் பாலு உள்ளிட்டோரிடம், இந்த கவலையை அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமி வெளிப்படுத்தி உள்ளார்.
பா.ம.க., ஒரே கட்சியாக இல்லாவிட்டால், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, சமரச முயற்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொள்வார் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ராமதாஸ் தான் எடுத்த முடிவிலிருந்து அவ்வளவு சீக்கிரம் இறங்கி வர மாட்டார் என்பதோடு, பிடிவாத குணம் கொண்டவர் என்பதால், பா.ம.க., வின் நிலை ரெண்டும் கெட்டானாக இருக்கிறதே என அ.தி. மு.க., - பா.ஜ.,வினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

