தீவிரமடையும் காற்று மாசு; சுவாசிக்க திணறும் தலைநகரம்
தீவிரமடையும் காற்று மாசு; சுவாசிக்க திணறும் தலைநகரம்
ADDED : டிச 19, 2025 02:25 AM

தலைநகர் டில்லியில் காற்றின் தரம் முன்பைவிட படுமோசமாகி இருக்கிறது. வாரத்தின் முதல் நாளில் வட மேற்கு டில்லியில் உள்ள ஜஹாங்கிரிபுரியில் காற்றின் தரக்குறியீடு, 498 என்ற மிக மோசமான அளவுக்கு பதிவாகி இருக்கிறது.
ஒப்பீட்டளவில் சொல்வதென்றால், 50க்கும் கீழாக இருந்தால் மட்டுமே சுவாசிக்க உகந்த காற்று. அப்படியென்றால், 498 என்பது எவ்வளவு மோசம் என் பதை ஊகித்துக் கொள்ளுங்கள். இதில், மிக ஆபத்தான காற்று மாசு என்பதை 'பி.எம்., 2.5' என, உலக சுகாதார அமைப்பு அழைக்கிறது.
சுவாச பிரச்னை
நுண்ணிய மாசு துகள் என்பதை தான், ஆங்கிலத்தில் பி.எம்., 2.5 என அழைக்கின்றனர். இது, கண்களுக்கு புலப்படாத ஆபத்தான மாசு துகள். தலைமுடியின் சராசரி தடிமனை விட, 40 மடங்கு சிறியது. சுவாசிக்கும் போது, மூக்கின் செயல்பாட்டால் மற்ற மாசு துகள்கள் உட்செல்வது தடுக்கப்படும். ஆனால், பி.எம்., 2.5 நுண்ணிய துகள்கள், நேராக நம் நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் கலக்க கூடும்.
இதனால், சுவாச பிரச்னை, இதய கோளாறு, பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். காற்றின் தரம் இந்த அளவுக்கு மோசமாக மாறியதால், சுவாசிக்க கூட முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
சுவாச பிரச்னைகள், கண் எரிச்சல், மூச்சு திணறல் , தொண்டை எரிச்சல், இருமல், தலைவலி என பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் டில்லி மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிலைமையை சமாளிக்க டில்லி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:
* பொதுமக்கள் வெளியே செல்லும்போது, 'என்95' முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்
* குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்
* நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது
* ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயில்வோர் மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கலாம். விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது
அபராதம்
* மேம்படுத்தப்பட்ட அதிரடி செயல் திட்டம் - 3ன் கீழ், டில்லியில் கட்டுமானப் பணிகளுக்கு முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது
* வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக, 10,000 ரூபாய் நிவாரணத் தொகையை டில்லி அரசு செலுத்துகிறது
* அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டும். மீறினால் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை பாயும்
* ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள், திறந்தவெளி உணவுக்கூடங்களில் தந்துாரி அடுப்புகள் பயன்படுத்த, விறகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

