ADDED : மார் 02, 2025 11:12 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள செட்டிநாட்டில் விமான நிலையம் அமைப்பதற்காக, ஓடுதளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செட்டிநாட்டில் கால்நடை பண்ணை ஆயிரத்து 907 ஏக்கரில் அமைந்துஉள்ளது. இங்கு இரண்டாம் உலகப் போரின் போது அமைக்கப்பட்ட இரண்டு விமான ஓடுதளங்கள் உள்ளன. விமானங்களை தரை இறக்க, எரிபொருள்நிரப்ப இத்தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தளம் இன்றுவரை சேதமடையாமல் உள்ளது.
பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, கானாடுகாத்தான் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்ககூடிய காரைக்குடி பகுதிக்குஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காரைக்குடியை சேர்ந்த மக்கள் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் சென்று வருகின்றனர்.
தவிர மத்திய தொழிற்படை, மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் அமைந்துள்ளதால் விஞ்ஞானிகள், மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய அரசில் பதவி வகிப்பவர்கள் பலர் வந்து செல்கின்றனர். சிறப்பு வாய்ந்த செட்டிநாட்டில், விமான நிலையம் அமைக்க வேண்டும்என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். தமிழகத்தில் உதான் திட்டத்தின் கீழ் அரக்கோணம், சோழவரம், சூலுார், உளுந்தூர்பேட்டை, செட்டிநாடு ஆகிய ஐந்து இடங்களில் விமான நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
செட்டிநாட்டில் உள்ள விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
அதன் அடிப்படையில் செட்டி நாட்டு விமான ஓடுதளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உதான் திட்ட சிறப்பு அதிகாரி ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., சக்தி மணி, எஸ்.வி.பி., ஏர்போர்ட் சந்திரமவுலி, சீனிவாசன், காரைக்குடி தாசில்தார் ராஜா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஓடுதளத்தின் இருபுறமும், 30 மீட்டர் இடமும், நுழைவு வாயிலில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் இடங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.