அனைத்து கட்சியிலும் தேர்தல் வேலை செய்வதில்... ஆர்வமில்லை; அரசியல் மாற்றத்தால் விழித்துக் கொண்ட தொண்டர்கள்
அனைத்து கட்சியிலும் தேர்தல் வேலை செய்வதில்... ஆர்வமில்லை; அரசியல் மாற்றத்தால் விழித்துக் கொண்ட தொண்டர்கள்
ADDED : ஏப் 10, 2024 01:51 AM

அரசியல் களத்தில் நாளுக்கு நாள் ஏற்படும் மாற்றங்களால் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் போன்று கட்சித் தொண்டர்கள் இந்த தேர்தலில் ஆர்வத்துடன் பணி மேற்கொள்ளாமல் ஒப்புக்காக வேட்பாளர்களுடன் ஓட்டு கேட்டுச் செல்கின்றனர்.
தேர்தல் என்றாலே அரசியல் கட்சி தொண்டர்களுக்கு திருவிழா தான். தொகுதிக்குள் எட்டிப்பார்க்காத எம்.பி.,யும், உதவி கேட்டுச் சென்ற போது மதிக்காத அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தேர்தல் வந்தால் தொண்டர்களைத் தேடி வருவார்கள். அவர்களை கொண்டாடுவார்கள்.
தொண்டர்களை மூளைச் சலவை செய்தும் தட்டிக் கொடுத்தும் தேர்தல் வேலை வாங்கும் நாடகம் நடத்துவார்கள். தலைவர்களின் தரிசனம் கிடைத்தால் போதும் என தொண்டர்களும் களத்தில் இறங்கி உழைக்கத் தயாராகி விடுவார்கள்.
தலைவர்களுக்கு வாய் பேச்சுதான் மூலதனம். தங்களின் பேச்சால் தொண்டர்களை உசுப்பேற்றி தேர்தல் பணி செய்ய வைத்து விடுவார்கள்.
ஆனால் இந்த பாசாங்கு வேலை இந்த தேர்தலில் தொண்டர்களிடம் பலிக்கவில்லை.
சுவர் விளம்பரம் எழுதுவதில் துவங்கும் தொண்டர்களின் மோதலை எங்கேயும் காண முடியவில்லை. மைக்கைப் பிடித்து ஊர் ஊராகச் சென்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரே ஒரு பட்டை சாதத்தை சாப்பிட்டு விட்டு மாலை வரை வேன்களில் ஓட்டு கேட்டு ஓடாய் தேய்ந்த தொண்டர்கள் இப்போது இல்லை.
கூலியின்றி மரத்திலும், மலைகளிலும் கொடி கட்டி கட்சி வளர்த்த காலம் மலையேறி விட்டது. ஆளும் கட்சி, எதிர் கட்சி என எல்லா கட்சியிலும் தொண்டர்களிடம் தேர்தல் வேலை செய்வதில் ஆர்வம் குறைந்து போனது.
இதற்கு முன்புவரை வேட்பாளர் வராவிட்டாலும் கூட்டணி கட்சியினரை அழைத்துக் கொண்டு அந்தந்த பகுதி ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய சேர்மன்கள், பேரூராட்சி சேர்மன்கள், கவுன்சிலர்கள் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் கொடுத்து ஓட்டு கேட்பார்கள்.
இதற்கான செலவை அந்தந்த பகுதியின் முக்கிய நிர்வாகிகள் செய்வார்கள். இந்த முறை இந்த செலவை செய்யக்கூட கட்சி நிர்வாகிகள் தயாராக இல்லை.
நிர்வாகிகள் வீடுகளில் முடங்கியதால் தொண்டர்களும் தங்கள் சொந்த வேலைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
இதற்கு முன்பு வரை தேர்தல் வந்தால் வீடு, வாசல், தொழில் எல்லாம் மறந்து கட்சிபணியே முதன்மையாக இருந்தது. இந்த நிலை மாறி தன் குடும்பம், தொழில், பிள்ளைகள் என முன்னுரிமை கொடுக்கின்றனர். இந்த வேலைகள் இல்லாமல் இருந்தால் தான் கட்சி வேலைக்கு வருகின்றனர். அப்படியே வந்தாலும் ஒப்புக்காக வேட்பாளருடன் ஓட்டு கேட்டுச் செல்கின்றனர்.
தொண்டர்களின் எண்ணிக்கை குறைவதால், அதை ஈடு செய்ய கூலிக்கு ஆள் பிடித்து வருகின்றனர். அவர்களிடம் கட்சி விசுவாசம் இல்லாததால் ஒப்புக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஆக்ரோஷமான கோஷங்களையும், பரபரப்பாக ஓட்டு கேட்பதையும் மிக குறைவாகவே காணப்படுகிறது.
இதற்கெல்லாம் தற்போதைய அரசியல் களத்தில் அதன் தலைவர்களால் நிகழும் மாற்றங்கள்தான் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-நமது நிருபர்-

