ADDED : செப் 30, 2024 05:14 AM

இன்றைய காலகட்டத்தில், நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்ற கேள்வி, சைவ பிரியர்களை விட, அசைவ பிரியர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் கொண்டு வரப்படும் இறைச்சி, மெல்ல கொல்லும் விஷம் தான் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட, 3,256 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து, பாதுகாப்பாற்ற முறையில் வந்திறங்கிய ஆட்டு கால்கள் மற்றும் மாட்டு இறைச்சிகளையும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேநேரத்தில் பிரியாணி சாப்பிடும் பலர், வாந்தி, பேதியால் பாதிக்கப்படுவதும், சிக்கன் ஷவர்மா சாப்பிடுவோர் உயிரிழக்கும் சம்பவமும், அசைவ பிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாம் சாப்பிடும் அசைவ உணவு, 100 சதவீதம் சுத்தமானதாகவோ, பாதுகாப்பானதாகவோ இல்லை என்கிறார், சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியின் இறைச்சி அறிவியல் துறை தலைவர் ஆர்.நரேந்திரபாபு.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: நம் நாட்டில் இறைச்சி சாப்பிடும் முறையும், வெளிநாட்டினர் இறைச்சி சாப்பிடும் முறையும் மாறுபட்டது. அவர்கள் உறைநிலைப்படுத்தப்பட்ட இறைச்சியையே அதிகம் சாப்பிடுகின்றனர். நாமோ குளிர்நிலை அல்லது வெட்டப்பட்ட சில மணி நேரங்களுக்குள் இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறோம்.
பொதுவாக இறைச்சியில் 6.5 அளவுக்கு அமிலத்தன்மை இருக்கும். அது வெட்டப்பட்டு, 'மைனஸ்' 18 டிகிரியில், 24 மணி நேரத்திற்கு மேலாக உறைநிலைப்படுத்தப்படும் போது, அமிலத்தன்மை இல்லாமல் போய் விடும். நாமோ வெட்டப்பட்ட சில மணி நேரங்களுக்குள் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதால், அமிலத்தன்மை நிறைந்த இறைச்சியையே சாப்பிடுகிறோம்.
இறைச்சியில் அமிலத்தன்மை 6க்குள் இருக்கும் போது நமக்கு பாதிப்பில்லை. வெட்டப்பட்ட இறைச்சியை உறைநிலைப்படுத்தாமல், பல மணி நேரம் வெளியில் வைத்திருந்து, சமைத்து சாப்பிடும் போது, அமிலத்தன்மை அதிகரிக்கும்.
அதனால், செரிமான பிரச்னை, நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படலாம். வெட்டப்பட்ட இறைச்சியை சாதாரண வெப்பநிலையில், நான்கு மணி நேரம் வரை வைத்திருந்தால், அதில் பெரிய அளவில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்காது. அதற்கு மேலாகும் போது, நுண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்கும்.
பொதுவாக இறைச்சியை, 0 முதல் 5 டிகிரி குளிர் நிலையில் வைத்திருந்தால், 24 மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். அதேபோல, மைனஸ் 18 டிகிரி உறைநிலையில் வைத்திருக்கும் இறைச்சியை, ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனாலும், இறைச்சி வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டியை அவ்வப்போது திறந்து மூடும் போது, உறைநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இறைச்சி பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இறைச்சியை ஒரே நேரத்தில் முழுமையாக வெட்டாமல், சிறிது சிறிதாக வெட்டும் போது, நான்கு மணி நேரத்திற்கு பின், ஈஸ்ட் மற்றும் மோல்ட், ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ், கேம்பிலோபாக்டர், சால்மோலெலா, ஈகோலி போன்ற நுண்ணுயிர்களின் பெருக்கம் அதில் அதிகரிக்கும்.
எனவே, சுகாதாரமான இறைச்சியை மக்களுக்கு வழங்கும் வகையில், அனைத்து கடைகளிலும் குளிரூட்டும் வசதி ஏற்படுத்த வேண்டும். இறைச்சியில் 70 சதவீதம் தண்ணீர் தான் இருக்கும். கடைகளில், 'ஏசி' இருந்தால், இறைச்சி நீர் வற்றாமல் இருக்கும். வியாபாரிகளுக்கு எடையும் குறையாது.
எனவே, அடிக்கடி தண்ணீர் தெளிப்பதை விட, குளிரூட்டும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதேநேரத்தில், நம் நாட்டில் இறைச்சியை தொங்கவிட்டு வெட்டும் முறை பின்பற்றப்படுவதால், நுண்ணுயிர்கள் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
நுண்ணுயிர்கள் பாதித்த இறைச்சிகளை, 72 டிகிரி வெப்பநிலையில் வேகவைக்கும் போது, அவை உயிரிழந்தாலும், அதன் மீதான தாக்கத்தால், வாந்தி, பேதி, குடல் பாதிப்பு ஏற்படும். சுகாதாரமற்ற இறைச்சிகள் என உணவு பாதுகாப்பு துறை கண்டறிந்தால், பிடிபடும் நிலையிலேயே பதப்படுத்தி, பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான், இறைச்சியின் தரம் குறித்து சரியான முடிவுகளை அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: பாதுகாப்பான முறையில் இறைச்சியை விற்பனை செய்யவும், ஹோட்டல்களில் சுகாதாரமான முறையில் உள்ள இறைச்சிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும், ஆங்காங்கே சில தவறுகள் நடந்து வருகின்றன. அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வடமாநிலங்களில் இருந்து, போலி முகவரிகளை பயன்படுத்தி, ஆடு, மாடு இறைச்சிகள் தமிழகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு கிலோ, 500 ரூபாயில் கிடைப்பதால், வியாபாரிகள் விதிமீறி பாதுகாப்பாற்ற முறையில் கொள்முதல் செய்து வருகின்றனர். அவற்றை தடுக்கும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
![]() |
- நமது நிருபர் -