அமித் ஷா ரொம்பவும் டேஞ்சர் ஆனவர்: கிலியூட்டும் பாரதி
அமித் ஷா ரொம்பவும் டேஞ்சர் ஆனவர்: கிலியூட்டும் பாரதி
ADDED : ஏப் 01, 2025 02:34 AM

சிங்கம்புணரி : ''வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அமித் ஷா எதையும் செய்வார். ஆகையால் கட்சியினர் முக்கிய விஷயங்களை செல்போன்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும்,'' என தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பாரதி பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்தபோது, பெண்களின் ஓட்டு முழுமையாக தி.மு.க.,வுக்கு கிடைத்தது. அவர் வெளியேறிய பின், அனைத்து ஓட்டுகளும் இரட்டை இலைக்கு போய்விட்டது.
வெகு காலத்துக்குப் பின், இப்போதுதான் பெண்களின் ஓட்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,விற்கு வந்துள்ளது.
வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அமித் ஷா எதையும் செய்வார். ஆகையால் கட்சியினர் முக்கிய விஷயங்களை செல்போன்களில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். உட்கட்சி பிரச்னைகளை செல்போனில் பேசவே கூடாது.
அதை பதிவு செய்து, அதை வைத்துக் கொண்டு, கட்சியை பிளவுபடுத்த பார்ப்பார் அமித் ஷா. அவர் ரொம்பவும் டேஞ்சர் ஆனவர். அதனால், அவரிடம் நாமெல்லாம் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
75 ஆண்டுகளாக பல தலைவர்கள் நம்மை எதிர்த்து பேசியுள்ளனர். ஆனால், அப்படி பேசியவர்கள் அதில் உறுதியாக நின்றதில்லை. பின், நம்மிடமே திரும்பி வந்துள்ளனர். இதுதான் வரலாறு. இன்றுவரை நடப்பது அதுதான்.
ஒரு காலத்தில், 'அறிவாலயத்தைக் கைப்பற்றுவேன்' என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். பின் என்ன நடந்தது? அவர் இன்று அறிவாலயத்தோடு செட்டில் ஆகி விட்டார். காமராஜர், இன்று உயிரோடு இருந்திருந்தால், அவரே கூட இன்று தி.மு.க.,வில் சேர்ந்திருப்பார். அப்படியொரு இயக்கமாக தி.மு.க., வளர்ந்திருக்கிறது.
17 மாதத்துக்கு முன்பு பிறந்த, ஒரு குழந்தை அரசியலில் பேரன், பேத்தி எடுத்த நம்மைப் பார்த்து சவால் விடுகிறது. அந்தக் குழந்தை நம் கால் துாசிக்கு சமம் என்பது, அந்தக் குழந்தைக்கும் தெரியும்.
ஒரு தொகுதியில் இரண்டு முறைக்கு மேல் நின்றால், மக்கள் தோற்கடித்து விடுவர் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். அதனால் தான், அவர் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடவில்லை.
பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, எம்.எல்.ஏ., ஆனது தி.மு.க., தயவில்தான். அவருக்கு இன்றைக்கு பென்ஷன் கிடைக்கிறது என்றால், அது தி.மு.க., போட்ட பிச்சை.
இவ்வாறு அவர் பேசினார்.

