சோனியா குடும்பத்தின் ஏ.டி.எம்., புதுச்சேரி: காங்கிரசை வறுத்தெடுத்த அமித் ஷா
சோனியா குடும்பத்தின் ஏ.டி.எம்., புதுச்சேரி: காங்கிரசை வறுத்தெடுத்த அமித் ஷா
UPDATED : பிப் 15, 2026 10:00 AM
ADDED : பிப் 15, 2026 04:48 AM

காரைக்கால்: ''புதுச்சேரியில் 60 சதவீத ஓட்டுகளுடன், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
புதுச்சேரி, காரைக்காலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறப்பான ஆட்சி நடத்துகிறார். ஆனால், கடந்த காங்., ஆட்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மோசமான ஆட்சியை கொடுத்தார். அந்த ஆட்சியில், ஊழல் நடந்ததோடு, அரசு அமைப்புகளும் சரியாக இயங்கவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கை சீர் செய்துள்ளோம். புதுச்சேரியை வளர்ச்சியடைந்த பிரதேசமாக்க வேண்டும் என்ற உறுதியோடு, பயணிக்க இருக்கிறோம்.
நாராயணசாமி ஆட்சியில், புதுச்சேரியை சோனியா குடும்பத்தின் ஏ.டி.எம்.,ஆக ஆக்கி இருந்தனர். அதாவது, எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பணத்தை எடுத்துக்கொள்ளும் இயந்திரமாக மாற்றி இருந்தனர். நாராயணசாமியின் ஒரே நோக்கம் டில்லி தலைமையின் கஜானாவை நிரப்புவது தான்.
அவர் மருத்துவப் படிப்பின் பி.ஜி., டிப்ளமோ சீட்டுகளை பட்டவர்த்தனமாக ஏலம் விட்டார். எஸ்.சி., - எஸ்.டி., ஒதுக்கப்பட்ட சீட்டுகள் கூட ஏலம் விடப்பட்டது. சென்டாக்கில் ஊழலை செய்துள்ளார். அந்த ஊழலின் புலன் விசாரணையை சி.பி.ஐ., செய்து வருகிறது.
அடுத்து புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாயையும் முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. நாராயணசாமி, தலித் மக்களின் நிலத்தை அபகரிக்கும் மோசமான செயலையும் செய்துள்ளார். அவருடைய காலத்தில் ஒரு தொழில் கூட புதுச்சேரியில் துவங்கப்படவில்லை. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

