UPDATED : செப் 04, 2025 10:53 PM
ADDED : செப் 04, 2025 04:32 AM

'கட்சியில் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட கூடாது; வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா, டில்லியில் தன் வீட்டில், தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி, மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடந்த கூட்டத்தில், தமிழகத்தில் கூட்டணியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர, தே.மு.தி.க., - பா.ம.க., தயக்கம் காட்டுகின்றன. கடந்த ஜூலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி தராததால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்ர்.
இவரது முடிவையே பின்பற்றும் வகையில் அ.ம.மு.க., தினகரனின் செயல்பாடு உள்ளது. எனவே, கூட்டணியை பலப்படுத்த வேண்டியவை தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகளிடம் அமித் ஷா கருத்துக்களை கேட்டார்.
பின், அமித் ஷா கூறியுள்ளதாவது:
பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் தகவல் கிடைத்துள்ளது. தனிநபரின் வளர்ச்சி கட்சிக்கு முக்கியமல்ல. கட்சியின் வளர்ச்சி தான் மேலிடத்துக்கு வேண்டும். தமிழக பா.ஜ., நிர்வாகிகளின் செயல்பாடுகளை, மேலிடம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கட்சி வளர்ச்சிக்கு கோஷ்டி பூசல் அதிகரிப்பது சரியில்லை. நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு என்று தனி கோஷ்டிகளை உருவாக்கி செயல்பட கூடாது.
தங்களுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க, தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து அனுப்பப்படுவர். அவர்களை, மாவட்ட வாரியாக அழைத்து சென்று, கட்சி வளர்ச்சி பணி, நலத்திட்ட உதவிகள், மத்திய அரசின் திட்டங்களை துவக்கி வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது டில்லி நிருபர் -