ADDED : ஜூன் 10, 2025 02:26 AM

மதுரை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., தான் ஜாதி, மதவாத அரசியல் செய்து வன்முறைக்கு வித்திடுகிறது. ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பகைமையை வளர்க்கிறது. இது உலகறிந்த உண்மை. ஆனால் அமித் ஷா, தி.மு.க.,வினர் மீது பழி போடுவது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
டில்லியில் விளையாடியதை போல தமிழகத்திலும் விளையாடலாம் என்பது அமித் ஷாவின் கனவாக இருக்கலாம். ஆனால் இங்கு அது பலிக்காது. தமிழகம் முற்றிலும் மாறுபட்ட பூமி. சமூக நீதிக்கான மண்.
பா.ஜ.,வினர் வடக்கே ராமர், கிருஷ்ணர், விநாயகர், மேற்கில் துர்கா, தமிழகத்தில் முருகனை துாக்கி பிடிக்கின்றனர். எல்லா கட்சியிலும் முருக பக்தர்கள் உள்ளனர். முருக பக்தர்கள் என்று சொன்னவுடன், ஏமாந்து பின்னால் வந்து விடுவர் என நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. இதை, 2026 தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு உணர்த்தும்.
இங்கு தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான இருதுருவ அரசியல் போட்டி தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.