தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் பலி; 26 ஆண்டுகளில் 148 பேர் சுட்டுக்கொலை
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் பலி; 26 ஆண்டுகளில் 148 பேர் சுட்டுக்கொலை
UPDATED : செப் 24, 2024 05:43 AM
ADDED : செப் 24, 2024 05:42 AM

மதுரை: தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் பலியாகி வருகின்றனர். கடந்த 26 ஆண்டுகளில் 148 பேர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு இரையாகி உள்ளனர்.
சமீபகாலமாக தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அரசியல் தலைவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ரவுடியிஸத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீஸ் உயர திகாரிகள் மாற்றப்பட்டனர். இதைதொடர்ந்து சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகள் போலீஸ் என்கவுன்டரில் பலியாயினர்.
நேற்றுகூட சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சீசன் ராஜா போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 3 என்கவுன்டர் நடந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் பலியாகி வருகின்றனர். இதில் ரவுடிகள், பொதுமக்களும் அடங்குவர். 1998 - 2001 தி.மு.க., ஆட்சியில் 22 பேர், 2001 அ.தி.மு.க., ஆட்சியில் 2, 2001 - 02 ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது 2, 2002 - 06 ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 25 பேர், போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகி உள்ளனர்.
குறிப்பாக 1998 முதல் 2024 நேற்று வரை அ.தி.மு.க., ஆட்சியில் 56 பேரும், பரமக்குடி, துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 23 பேரும் பலியாகி உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் 69 பேர் இறந்துள்ளனர்.
போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் இறந்தது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணைகள் முடிந்தும் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாகவோ, சட்ட நடவடிக்கையோ எடுக்கவில்லை என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன.
![]() |
![]() |